ராமதாஸ் கூட்டும் பொதுக்குழு செல்லாது: தேர்தல் கமிஷனில் அன்புமணி புகார்
ராமதாஸ் கூட்டும் பொதுக்குழு செல்லாது: தேர்தல் கமிஷனில் அன்புமணி புகார்
ADDED : டிச 24, 2025 07:00 AM

சென்னை: கட்சி பெயரை தவறாக பயன்படுத்தி, சேலத்தில், வரும் 29ம் தேதி, சட்ட விரோதமாக, பா.ம.க., செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தை ராமதாஸ் கூட்டுவதாக, தேர்தல் கமிஷனில், பா.ம.க., தலைவர் அன்புமணி சார்பில், புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பா.ம.க.,வில் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நீடிக்கும் நிலையில், அன்புமணியை கட்சி தலைவராக தேர்தல் கமிஷன் அங்கீரித்து உள்ளது.
இந்நிலையில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பு பா.ம.க., சார்பில், வரும் 29ம் தேதி சேலத்தில், பொதுக்குழுக் கூட்டம் நடக்க உள்ளது. அதில், 'சட்டசபை தேர்தல் கூட்டணி உள்ளிட்டவை குறித்து, முக்கிய முடிவு எடுக்கப்படும்' என, ராமதாஸ் அறிவித்தார். இதையடுத்து, அவர் தலைமையில் நடக்க உள்ள, பொதுக்குழு சட்ட விரோதமானது; அது செல்லாது என, தேர்தல் கமிஷனுக்கு அன்புமணி தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பா.ம.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: பா.ம.க., அமைப்பு விதிகள் 15, 16 ஆகியவற்றின் அடிப்படையில், பொதுக்குழு உட்பட, எந்த கூட்டமாக இருந்தாலும், பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சி தலைவர், பொதுச்செயலர் ஆகியோரால் கூட்டப்பட்டு, பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி தலைவர் தலைமையில் தான் நடக்க வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்றத்திலும், டில்லி உயர் நீதிமன்றத்திலும், கட்சியின் ஒரு தரப்பினர் தொடர்ந்த வழக்கில், பா.ம.க., தலைவர் அன்புமணி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவை கூட்டவும், அதற்கு தலைமையேற்கவும், அவரை தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை.
கட்சி பெயரை தவறாக பயன்படுத்தி, சட்ட விரோதமாக, செயற்குழு மற்றும் பொதுக்குழு என்ற பெயரில், ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து, தேர்தல் கமிஷனுக்கு, பா.ம.க., தலைமை முறைப்படி தகவல் தெரிவித்துள்ளது.
எனவே, சேலத்தில் 29-ம் தேதி நடக்க உள்ள கூட்டம், பா.ம.க., பொதுக்குழு கூட்டம் அல்ல. அதில் எடுக்கும் முடிவுகள், கட்சியை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

