அரசு தொடக்க பள்ளிகளில் 4 லட்சம் மாணவர்கள் சேர்க்கை; ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை
அரசு தொடக்க பள்ளிகளில் 4 லட்சம் மாணவர்கள் சேர்க்கை; ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை
UPDATED : ஆக 05, 2025 08:05 AM
ADDED : ஆக 05, 2025 04:51 AM

மதுரை: தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்தாண்டும் 4 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் அதற்கேற்ப ஆசிரியர்கள் நியமனங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மாணவர்களுக்கு அடிப்படை கல்வியை அளிக்கும் தொடக்க கல்வித்துறையில் 2014க்கு பின் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனங்கள் இல்லை. அதேநேரம் தொடக்கப் பள்ளி, நடுநிலை பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் என 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அரசின் நலத்திட்டங்களால் ஆண்டுதோறும் தொடக்க பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு 3.20 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இந்தாண்டு 4 லட்சத்து 364 மாணவர்கள் சேர்க்கையாகியுள்ளனர்.
குறிப்பாக முதலாம் வகுப்பில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 563 மாணவர் சேர்ந்துள்ளனர். ஆனால் அதற்கேற்ப ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.
இந்தாண்டு நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. இன்னும் பல ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மாணவர்களுக்கான கற்பித்தல் பணி கேள்விக்குறியாகியுள்ளது என சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
இதுகுறித்து தொடக்க கல்வி சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தொடக்க கல்வியில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்கள் எண்ணிக்கை 1.17 லட்சம். ஆனால் தற்போது 1.07 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். இந்தாண்டு 5 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்க்க வேண்டும் என்ற இலக்கில் 4 லட்சம் மட்டுமே சேர்க்கையாகி உள்ளனர். ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் தான் மாணவர்கள் சேர்க்கை இலக்கை அடைய முடியும். டி.இ.டி., தேர்ச்சி பெற்று 60 ஆயிரத்திற்கும் மேல் பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். ஆனால் நிதிநிலையை காரணம் காட்டி நியமனங்கள் இல்லை. அதேநேரம் தற்காலிக ஆசிரியர்களை கல்வித்துறை நியமித்து வருகிறது. கல்வித்துறை செலவுகளை செலவினமாக பார்க்காமல் கல்வி வளர்ச்சிக்கானதாக பார்க்க வேண்டும் என்றனர்.