விவசாயியிடம் ரூ.2,000 லஞ்சம் : பெண் வேளாண் அதிகாரி கைது
விவசாயியிடம் ரூ.2,000 லஞ்சம் : பெண் வேளாண் அதிகாரி கைது
ADDED : டிச 24, 2025 06:56 PM

திண்டுக்கல்: பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில் பணம் வருவதற்கு, ஆன்லைனில் பதிவு செய்ய, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் உதவி வேளாண் அலுவலரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பிலாத்து ஆண்டிக்குளத்தை சேர்ந்த விவசாயி கருப்பையா, 60. இவருக்கு பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில், இரு ஆண்டுகளாக பணம் வரவில்லை. வட மதுரை உதவி வேளாண் அலுவலர் சந்திரலேகா, 39, என்பவரிடம் புகார் செய்தார். ஆன்லைனில் பதிவு செய்து தர, சந்திரலேகா 2,500 ரூபாயை, கருப்பையாவிடம் லஞ்சமாக கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கருப்பையா, திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரைப்படி இன்று( டிச.,24) காலை வடமதுரை வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் சந்திரலேகாவிடம், 2,000 ரூபாயை கொடுத்தார்.
மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சந்திரலேகாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

