அமைச்சர் நேரு தம்பி மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து
அமைச்சர் நேரு தம்பி மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து
ADDED : ஜூலை 25, 2025 01:45 AM

சென்னை: வங்கி மோசடி புகார் தொடர்பாக, அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மீது, அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்களை திருப்பி ஒப்படைக்கவும், அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு. இவரின் தம்பி என்.ரவிச்சந்திரன். இவர் இயக்குனராக உள்ள, 'ட்ரூடோம் இ.பி.சி., இந்தியா' நிறுவனம், கடந்த 2013ல், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம், 30 கோடி ரூபாய் கடன் பெற்றது.
இந்த தொகையை, கடன் பெற்ற நிறுவனம், தன் சகோதர நிறுவனங்களுக்கு திருப்பி விட்டதன் வாயிலாக, தங்களுக்கு 22 கோடியே 48 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, வங்கி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதன்படி, அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது, கடந்த 2021ம் ஆண்டு சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. இதை அடிப்படையாக வைத்து, அமைச்சர் நேரு, அவரது சகோதரர்கள், சகோதரி மற்றும் மகனின் வீடு, அலுவலகம் என, 15க்கும் மேற்பட்ட இடங்களில், சமீபத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
சி.பி.ஐ., பதிவு செய்த வழக்கு விசாரணை, எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்தாண்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, 'இந்த வழக்கில் மோசடி எதுவும் நடக்கவில்லை. அரசு ஊழியர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை என்பதால், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீதான சி.பி.ஐ., வழக்கு ரத்து செய்யப்படுகிறது' என, உத்தரவிட்டிருந்தார்.
அதையடுத்து, சி.பி.ஐ., பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்பட்டதால், அந்த வழக்கின் அடிப்படையில் பதியப்பட்ட அமலாக்கத் துறை வழக்கையும் ரத்து செய்யுமாறும், சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள், பணத்தை திருப்பித் தர உத்தரவிடுமாறும், உயர் நீதிமன்றத்தில் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, 'சி.பி.ஐ., பதிவு செய்த பிரதான வழக்கு ரத்து செய்யப்பட்டு விட்டதால், அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையால் பதிவு செய்த இந்த வழக்கையும் ரத்து செய்கிறோம்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள், பணத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.