மத்திய அரசு திட்டங்களை முடக்க பார்க்கிறது திமுக; ஆடியோ வெளியீட்டு நயினார் நாகேந்திரன் ஆவேசம்
மத்திய அரசு திட்டங்களை முடக்க பார்க்கிறது திமுக; ஆடியோ வெளியீட்டு நயினார் நாகேந்திரன் ஆவேசம்
ADDED : செப் 03, 2025 04:11 PM

சென்னை: மக்களுக்கு உதவ முயன்ற பாஜக நிர்வாகியை திமுக நகராட்சி தலைவர் மிரட்டும் ஆடியோவை வெளியிட்டு, “மத்திய அரசு திட்டங்களை திமுக முடக்க பார்க்கிறது' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.
அவரது அறிக்கை: பழனி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு, குறு தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசின் ஸ்வானிதி மற்றும் முத்ரா கடனுதவிகள் அவர்களுக்குக் கிடைக்க வழிவகை செய்து கொடுக்க முயன்ற திண்டுக்கல் பாஜ மேற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் பரமேஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார் பழனி திமுக நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி. அதிலும், “எந்த கவர்மெண்ட் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறதோ அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்” என்ற தொனியில் அவர் பேசியிருப்பது அதிகார மமதையின் வெளிப்பாடு.
திமுகவினரின் இந்த ஆணவப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.மக்களுக்கு பலனளிக்கும் மத்திய அரசின் நலத்திட்டங்களை ஆளும் அரசும் செயல்படுத்த மாட்டார்கள், அவற்றை மக்களிடையே கொண்டு சேர்ப்பவர்களையும் விட மாட்டார்கள் என்றால் இது என்ன விதமான மனநிலை? ஒருவேளை மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்து விட்டால் தங்களின் மடைமாற்று நாடகங்கள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும் என்று திமுக அரசு அஞ்சுகிறதா?
திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு தமிழகத்தின் வளர்ச்சி பலியாக வேண்டுமா?ஆனால், திமுகவின் அத்தனைத் தடைகளையும் தகர்த்து, பிரதமர் மோடியின் சிறந்த திட்டங்கள் அனைத்தும் தமிழக மக்களுக்குக் கிடைப்பதை தமிழக பாஜ உறுதி செய்யும். அடக்குமுறைகளாலும், அதிகாரத் துஷ்பிரயோகத்தாலும் எங்களின் மக்கள் பணியைத் திமுகவால் ஒடுக்கிவிட முடியாது. மக்கள் பிரச்னைகளுக்குக் குரல் கொடுப்பவர்களையும், நலிவடைந்தோரின் நலன் விரும்பிகளையும் கண்டால் திமுகவிற்கு அப்படியென்ன ஒவ்வாமை என்பது புரியவில்லை. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.