குடியுரிமை திருத்தச் சட்டத்தின் காலக்கெடு 2024 டிச.,31 வரை நீட்டிப்பு
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் காலக்கெடு 2024 டிச.,31 வரை நீட்டிப்பு
ADDED : செப் 03, 2025 04:44 PM

புதுடில்லி: அண்டை நாடுகளில் இருந்து இடம்பெயர்ந்த சிறுபான்மையிருக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் காலக்கெடு 2024 டிச., 31 தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து, நம் நாட்டுக்குள் அகதிகளாக வந்த குறிப்பிட்ட சில பிரிவினருக்கு, குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது.
இதன்படி, இந்த நாடுகளில் சிறுபான்மையினராக இருந்த ஹிந்து, சீக்கியர், ஜெயின், புத்த, பார்சி மற்றும் கிறிஸ்துவ மதத்தினருக்கு குடியுரிமை வழங்கப்படும். கடந்த 2014 டிச., 31ம் தேதிக்கு முன், அங்கு சித்ரவதைகளை சந்தித்து, அகதிகளாக வந்தவர்களுக்கு, இந்திய குடியுரிமை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான சட்டம் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2024ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, கடந்த 2014, டிச., 31க்கு முன், நம் நாட்டுக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். கடந்த ஓராண்டில் கட்டாயம் இங்கு வசித்திருக்க வேண்டும். அதற்கு முந்தைய 14 ஆண்டுகளில், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் நம் நாட்டில் தங்கியவர்களுக்கு இந்த குடியுரிமை வழங்கப்படும்.
இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் காலக்கெடு 2014ல் இருந்து 2024 டிச., 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 2014ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுக்கு அகதிகளாக வந்த வெளிநாட்டு சிறுபான்மையினரும் பயன் பெற முடியும்.