டவுட் தனபாலு: '543 தொகுதியும் எங்களுக்கு தான்'னு சொல்லிடுவீங்களோ
டவுட் தனபாலு: '543 தொகுதியும் எங்களுக்கு தான்'னு சொல்லிடுவீங்களோ
ADDED : மார் 28, 2024 03:37 AM

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை:
இந்திய அரசியல் வரலாற்றில், இது முக்கியமான தேர்தல். இந்தியா முன்னேறக்கூடாது என்று நினைப்பவர்கள் ஓரணியில் உள்ளனர். 2024ல் மோடி தான் பிரதமராவார் என்பது, தேர்தலுக்கு முன்னரே தெரிந்து விட்டது. எந்த ஒரு சட்டத்தையும் நிறைவேற்றும் அதிகாரத்தை மக்கள் வழங்க வேண்டும் என்பதால் தான், '400 எம்.பி.,க்கள் வேண்டும்' என, மோடி கேட்கிறார்.
டவுட் தனபாலு:
ஆரம்பத்துல, '300 தொகுதிக்கு மேல வேணும்'னு சொன்னீங்க... அப்புறம், 370ன்னு இலக்கு நிர்ணயம் பண்ணீங்க... இப்ப, 400க்கு போயிட்டீங்க... நீங்க போற வேகத்தை பார்த்தா, '543 தொகுதியும் எங்களுக்கு தான்'னு சொல்லிடுவீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
----
பா.ஜ.,வை சேர்ந்த, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா:
அசாம் மாநில காங்., தலைவர் பூபேன் குமார் போரா, அடுத்த ஆண்டு ஜன., அல்லது பிப்., மாதம் பா.ஜ.,வில் இணைவார். அவருக்காக இரண்டு தொகுதிகளை தயாராக வைத்துள்ளேன்.
டவுட் தனபாலு:
அடடா... அரசியல் களத்துல இவ்வளவு பகிரங்கமா யாரும், 'ஆபர்' தரவே மாட்டாங்க... உங்க கட்சியின் ரெண்டு எம்.எல்.ஏ.,க்களின் பதவியை பலி கொடுத்து, காங்., தலைவரை இழுக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்ற, 'டவுட்' வருதே!
----
பத்திரிகை செய்தி:
துாத்துக்குடி தி.மு.க., - எம்.பி., கனிமொழியின் சொத்து மதிப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளில் 27 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன், 30 கோடி ரூபாயாக இருந்த அவரது சொத்து மதிப்பு, தற்போது, 57.32 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
டவுட் தனபாலு:
அரசியல்வாதிகள் சொத்து மதிப்பு தான், ஆண்டுக்காண்டு உயர்ந்தபடியே உள்ளது... அதற்கு நேர்மாறா, அவங்களுக்கு ஓட்டு போடுற அப்பாவி மக்களின் கடன் சுமை நாளுக்கு நாள் ஏறிட்டே போகுது... இது, அரசியல்வாதிகள் தவறா அல்லது அவங்களுக்கு ஓட்டு போட்ட வாக்காளர்களின் தவறா என்ற, 'டவுட்'தான் எழுது!

