திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற கந்தசஷ்டி பாடி உள்ளூர் மக்கள் உண்ணாவிரதம்
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற கந்தசஷ்டி பாடி உள்ளூர் மக்கள் உண்ணாவிரதம்
UPDATED : டிச 14, 2025 05:50 AM
ADDED : டிச 14, 2025 05:47 AM

மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி உள்ளூர் மக்கள் கந்த சஷ்டி கவச பாடல் பாடி உண்ணாவிரதம் இருந்தனர்.
![]() |
தாத்தா காலம் முதலே போராட்டம்
![]() |
எம்.பிரியா: நான் பிறந்ததும், வாழ்வதும் திருப்பரங்குன்றத்தில் தான். 43 வயதாகிறது. மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற நான் பிறக்கும் முன்பிருந்தே எனது பெற்றோர், தாத்தா, பாட்டி போராடிக் கொண்டுதான் இருந்தனர். தற்போது நீதிமன்றம் நல்ல உத்தரவை பிறப்பித்தும் தீபம் ஏற்ற மறுப்பது மனதிற்கு வேதனையாக உள்ளது. முருகப்பெருமான் மலைகளில் தீபம் ஏற்றுவது என்பது தொன்மையான கலாசாரம். அதுபோல் திருப்பரங்குன்றத்திலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்.
ஆதாரத்தின் அடிப்படையில் தீர்ப்பு
![]() |
சிவ யசோதா: தீபத்துாணில் நாடு செழிக்க, மக்கள் செழிக்க, ஆன்மிக சிந்தனை வளர தீபம் ஏற்றப்பட்டு வந்துள்ளது. இதற்கு வரலாற்றில் ஆதாரம் உள்ளது. என்ன காரணத்தினாலோ இடைப்பட்ட காலத்தில் நிறுத்தப்பட்டு விட்டது. பின்பு மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில்
கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இது ஆன்மிகத்திற்கு முரண்பாடானது. ஆதாரங்களின் அடிப்படையில்தான் நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும்.
பாரம்பரிய உரிமை
![]() |
பிரியா: மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். அது எங்களது பாரம்பரிய உரிமை. யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது. எங்களது உரிமைகளையும், கலாசாரத்தையும் விட்டுக் கொடுக்கக்கூடாது என்பதற்காக உண்ணாவிரதம் இருக்கிறோம்.
52 கிராம மக்கள் காத்திருப்பு
![]() |
முத்துக்கருப்பன்: மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றியதாக எங்களது பாட்டன், பூட்டன், சியான் கூறியுள்ளனர். இடையில் ஏதோ காரணங்களுக்காக நிறுத்தப்பட்டு விட்டது. அதிலிருந்து தொடர்ந்து கோரிக்கை வைத்துதான் வருகிறோம். மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது எங்களது கலாசாரத்தை கேவலப்படுத்துவது போல் உள்ளது. இது ஆகம விதிகளுக்கு உட்பட்டதா. 100 ஆண்டுகளுக்கு முன்பு தீபத்துாணில் தீபம் ஏற்றியுள்ளனர். அதேபோல் திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள 52 கிராமங்களுக்கும் தெரியும்படி நீதிமன்ற உத்தரவுப்படி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இதை 52 கிராம மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
அப்பத்தா பார்த்துள்ளார்
![]() |
மகாராஜன்: மீண்டும் தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது மட்டுமே எங்களது குறிக்கோள். அதற்காகவே ஒன்று திரண்டு உள்ளோம். எனது அப்பத்தா இந்த ஊரில் பிறந்தவர் தான். தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றியதை பார்த்ததாக அவரே கூறியிருந்தார். தீபம் ஏற்ற யாரும் தடை போடக்கூடாது. எங்கெல்லாம்
முருகப்பெருமான் குடி கொண்டுள்ளாரோ அங்கெல்லாம் அவரது கையில் வேல் மட்டுமே
இருக்கும். திருப்பரங்குன்றத்தில் கையில் வேலுடன் தராசும் இருக்கும். இந்த அமைப்பு கோயிலின் பெரிய வைர தேரில் உள்ளது. இந்த ஊரில் நடக்கும் அனைத்தையும் முருகப்
பெருமான் தராசு மூலம் நிறுப்பதாகவும், தவறு செய்தவர்களை தண்டிப்பார் என்பதும் ஆண்டாண்டு காலமாக மக்களின் நம்பிக்கை.
சில நெருக்கடிகளே காரணம்
![]() |
பிரபு, உண்ணாவிரதம் இருக்க ஊர் பொதுமக்கள் சார்பில் மனு செய்தவர்: மலை உச்சியில் இருப்பது தீபத்துாண்தான். அதன் அமைப்பை பார்த்தாலே தெரியும். ஆனால் தமிழக அரசும், அறநிலையத்துறையும் அதை சர்வே கல் என்றும் கிரானைட் கல் என்றும் கூறுகின்றன. இதை கேட்பதற்கே மனது வலிக்கிறது. நீதி ஒரு போதும் துாங்காது. எங்கள் முன்னோர்கள் அந்த தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றியதாக கூறியுள்ளனர். உச்சிப் பிள்ளையார் மண்டபத்தில் 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றுவதாக கூறுகிறார்கள். அது தவறு.
எங்களுக்கு தெரிந்தவரை அதிகபட்சம் 25 ஆண்டுகள் கூட ஏற்றி இருக்க மாட்டார்கள். அங்கு தீபம் ஏற்றியதற்கு காரணம், சில இயக்கங்கள் கொடுத்த
நெருக்கடிதான். தீபத்துாணில் தீபம் ஏற்ற தொடர்ச்சியாக 60 ஆண்டுகளுக்கும் மேலாக போராடுகிறார்கள். அதை திசை திருப்புவதற்காக தான் உச்சிப் பிள்ளையார் மண்டபத்தின் மேல் கார்த்திகை தீபம் ஏற்றும் சம்பிரதாயம் தொடங்கியது. இவ்வளவு நாட்கள் அமைதியாக தான் இருந்தோம். எங்களது கலாசாரத்தை மரபை மீறுவதுடன் சட்டத்தையும் மீறுகிறார்கள். அதனால் தான்
பொதுமக்கள் கேள்வி கேட்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இவ்வாறு கூறினர்.








