அமைச்சர் மூர்த்தி தொகுதியில் ஒரே வீட்டில் 211 ஓட்டுகள்; கலெக்டரிடம் பா.ஜ., புகார்
அமைச்சர் மூர்த்தி தொகுதியில் ஒரே வீட்டில் 211 ஓட்டுகள்; கலெக்டரிடம் பா.ஜ., புகார்
ADDED : டிச 30, 2025 05:28 AM

மதுரை: ''அமைச்சர் மூர்த்தியின் மதுரை கிழக்கு தொகுதியில் ஒரே வீட்டில் 200க்கும் மேற்பட்ட ஓட்டுகள் முறைகேடாக சேர்க்கப்பட்டு உள்ளன. இத்தொகுதியில் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்'' என பா.ஜ., வினர் கலெக்டர் பிரவீன்குமாரிடம் மனு அளித்தனர்.
மதுரை கிழக்குத் தொகுதி பொறுப்பாளரும், பா.ஜ., கூட்டுறவு பிரிவு தலைவர் மகாசுசீந்திரன், இணை அமைப்பாளர் ராஜா, ஊடக பிரிவு மாநில பொறுப்பாளர் வேல்பாண்டியன் உட்பட கட்சியினர் கூறியதாவது: மதுரை கிழக்கு தொகுதி தமிழகத்தில் 2வது பெரிய தொகுதி. 3.70 லட்சம் ஓட்டுகளுக்கு மேல் உள்ளது. இத்தொகுதியில் 328 ஓட்டுச்சாவடிகள் இருந்தன. தற்போது 395 ஓட்டுச் சாவடிகள் உள்ளன.
ஒரே வீட்டில் நுாறு ஓட்டுகள்
முதல்வர் ஸ்டாலின் வென்ற கொளத்துார் தொகுதி சிறிய தொகுதியாக இருந்தாலும் அங்கு எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்குப் பின், இறந்தோர், தொகுதி மாறியோர், விடுபட்டவை என 70 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் நீக்கப்பட்டுள்ளன. ஆனால் அமைச்சர் மூர்த்தியின் மதுரை கிழக்கு தொகுதியில் 20 ஆயிரம் ஓட்டுகளே நீக்கப்பட்டுள்ளன.
இங்கு முறையாக ஆய்வு நடத்தினால் 90 ஆயிரம் ஓட்டுகளாவது நீக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏனெனில் நாங்கள் ஆய்வு செய்த சில வார்டுகளில் ஒரே முகவரியில் நுாற்றுக்கணக்கானேர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களாக உள்ளனர். மதுரை மாநகராட்சி 38 வது வார்டு வண்டியூர் தீர்த்தக்காடு என்ற பகுதி வாக்காளர் பட்டியலில் பாகம் எண் 337ல் 115 பேரும் 1 இ என்ற ஒரே கதவு எண்ணில் உள்ளனர். அதேபோல பாகம் எண் 338 லும் 96 பேர் அதே 1 இ வீட்டு எண்ணில் உள்ளனர். இது எப்படி சாத்தியம்.
பட்டியலில் முறைகேடு
பி.எல்.ஓ.,க்களாக சாதாரண அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றினர். அவர்களால் அதிகாரிகள், ஆளும்கட்சியினரை எதிர்த்து பணியாற்ற முடியாது. அமைச்சர் மூர்த்தி முதல்வர் போல செயல்படுகிறார். இதனால் முறைகேடாக வாக்காளர் பட்டியலில் பல ஆயிரம் பேர் உள்ளனர். எனவே தொகுதி முழுவதும் ஆய்வு செய்து தகுதியற்றோரை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
இதுகுறித்து கலெக்டரிடம் மனு கொடுத்தோம். விசாரிப்பதாக தெரிவித்தார். இவ்வாறு கூறினர்.

