பெண் புலவர்கள் எழுதாத பெண் விடுதலை தைரியமாக எழுதினார் பாரதி!
பெண் புலவர்கள் எழுதாத பெண் விடுதலை தைரியமாக எழுதினார் பாரதி!
ADDED : டிச 24, 2022 09:58 PM

''சங்க காலத்தில் பல பெண் புலவர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் கூட பெண் விடுதலை பற்றி எழுதவில்லை, பாரதிதான் முதலில் எழுதினார்,'' என எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் பேசினார்.
கோவையில் மக்கள் சிந்தனை மேடை சார்பில், பாரதி பிறந்தநாள் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் ராஜாமணி தலைமை வகித்தார். இதில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் பேசியதாவது:
பாரதியை அவரின் சிந்தனை வழியாகவும், வாழ்க்கை வழியாகவும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பாரதி ஒரு கவிஞர் மட்டுமல்ல, சிறுகதையாளர், பத்திரிகையாளர், சமூக சிந்தனையாளர் என, பன்முக தன்மையுடன் வாழ்ந்தவர்.
பாரதியின் கவிதைகள் வழியாகதான், தமிழில் புதிய இலக்கியங்கள் தோன்றின. ராமாயணத்தை தமிழில் இயற்றிய கம்பனை பற்றி, 12ம் நுாற்றாண்டு முதல் 20ம் நுாற்றாண்டு வரை, யாரும் ஒரு வரி கூட எழுதவில்லை. பாரதிதான் எழுதினார்.
சங்க காலத்தில் பல பெண் புலவர்கள் இருந்தனர். அதில் ஒருவர் கூட பெண் விடுதலை பற்றி எழுதவில்லை. பாரதிதான் முதலில் எழுதினார். இப்படி பல விஷயங்களை பாரதியை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
இன்றைக்கு சமூக சிந்தனை குறித்தும், சமத்துவம் குறித்தும் பலர் பேசி வருகின்றனர். ஆனால், இதுகுறித்து யாரும் சிந்திக்காத காலத்தில், சிந்தித்தும், பேசியும், எழுதியும் வந்தவர் பாரதியார்.
இவ்வாறு, அவர் பேசினார். அமைப்பின் நிர்வாகிகள் யுவராஜன், மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.