ADDED : டிச 24, 2025 06:38 AM

நமது சிறப்பு நிருபர்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காரணம்பேட்டையில், வரும், 29ம் தேதி, தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடக்கிறது. இது குறித்து பல்லடத்தில், தி.மு.க., எம்.பி., கனிமொழி அளித்த பேட்டி: மேற்கு மண்டலத்தில் தி.மு.க., இழந்த பெருமையை மகளிர் அணி மாநாடு மீட்டெடுக்கும். நாடு மட்டுமல்ல, உலகமே திரும்பி பார்க்கும் மாநாடாக இது அமையும்.
அரசியல் காரணங்களுக்காக, மகளிருக்கு பாதுகாப்பில்லை என சிலர் பொய்யான விமர்சனங்களை முன் வைக்கின்றனர்.
தற்போது நடப்பது, பெண்களுக்கான ஆட்சி. பெண்களுக்கான விடியல் பயணத்துடன் தான் தி.மு.க., ஆட்சி துவங்கியது. தமிழகத்தில், மதுக்கடைகளை படிப்படியாக குறைத்துக் கொண்டுதான் வந்துள்ளோம். மதுக்கடைகளை மேலும் குறைப்பதற்கு நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். திருப்பூர் குப்பை பிரச்னையை கண்டித்து, முதல்வர் ஸ்டாலின், திருப்பூர் வரும்போது கருப்புக்கொடி காட்டப்படும் என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
மற்றவர்கள் வேண்டுமானால் கருப்புக்கொடி காட்டினால் வருத்தப்படலாம். ஆனால், நாங்கள் கருப்பில் இருந்து வந்தவர்கள். கருப்புக்கொடி காட்டுவதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம். அனைத்து தரப்பு மக்களிடமும் கலந்து பேசி, தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். மக்கள் தேவைகளை கேட்டறிந்து, அவற்றை தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்வோம். வாக்குறுதிகளின் எண்ணிக்கை எல்லாம் கணக்கு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

