அறப்போர் இயக்க கருத்து கேட்பு கூட்டத்தில் தாக்குதல்; சட்ட விரோத கல்குவாரி ஆதரவு கும்பல் அடாவடி
அறப்போர் இயக்க கருத்து கேட்பு கூட்டத்தில் தாக்குதல்; சட்ட விரோத கல்குவாரி ஆதரவு கும்பல் அடாவடி
ADDED : நவ 02, 2025 07:28 PM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கல்குவாரிகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறப்போர் இயக்கத்தினர் நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில் புகுந்து சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களின் கருத்துக் கேட்பு கூட்டம் நெல்லையில் உள்ள ரோஷ் மஹாலில் அறப்போர் இயக்கம் சார்பில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆலங்குளம், பொன்னாக்குடி, கயத்தாறு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, சட்ட விரோத கல்குவாரிகளுக்கு ஆதரவானவர்கள் என சிலர் உள்ளே புகுந்து ரகளை செய்துள்ளனர்.போலீசார் முன்னிலையில் பிளாஸ்டிக் சேர்களை தூக்கி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர்.
இதில், கருத்துக் கேட்புக் குழுவின் தலைவர் சுரேஷ் உள்பட சிலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அறப்போர் இயக்கம் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்ட அறிக்கை:
மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடாது என்ற நோக்கில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் ஆளுங்கட்சி திமுகவை சேர்ந்தவர்கள் என்று கேள்விப்படுகிறோம். இது குறித்த புகாரை அறப்போர் இயக்கம் காவல்துறைக்கு அளித்துள்ளது.
காவல்துறை இந்த அப்பட்டமான வன்முறை தாக்குதல் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? காவல்துறை உடனடியாக தாக்குதல் நடத்திய குண்டர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறப்போர் இயக்க நிர்வாகி ஜெயராம் வெங்கடேசன் கூறியதாவது; திருநெல்வேலியில் கல்குவாரி பாதிப்பு குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது. கல்குவாரியால் பாதிக்கப்பட்டவர்கள் பிரச்னைகளை சொல்லிவிட்டால், கல்குவாரிகளை மூடிவிட்டால் என்ன பண்ணுவது என்று சிலர் நினைக்கின்றனர். ஏற்கனவே, ரூ.262 கோடி மிகப்பெரிய ஊழல் முறைகேட்டை நாம் வெளிக்கொண்டு வந்து விட்டோம்.
சுமார் ரூ.600 கோடி அளவுக்கு கல் குவாரியில் முறைகேடுகள் நடக்கிறது. அப்படி இருக்கும் போது இதுபோன்ற நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட மக்கள் வந்து கலந்து கொண்டு, தங்களின் பிரச்னைகளை கூறி வந்தனர்.
அப்போது, திடீரென குவாரிகளுக்கு ஆதரவாக வந்து மிகப்பெரிய கலாட்டா செய்தனர். 'நீங்கள் ஏதோ யுடியூப் சேனலில் கல் குவாரிகளில் திருடப்படுவதாக சொல்லி விட்டீர்கள். மன்னிப்பு கேட்க வேண்டும்,' என்று சொன்னார்கள். நான் எதுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். நீங்களும் கருத்துக்களை சொல்லுங்கள் என்று சொன்னோம். இதுபோன்ற பிரச்னைகள் வரும் என்று தெரிந்து தான் நாங்கள் இதைச் செய்து வருகிறோம்.
மக்கள் ஒவ்வொரு ஊரிலும் இப்படித்தான் மிரட்டப்படுகிறார்கள். இந்த மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம். இந்த பிரச்னைகளால் நிகழ்ச்சியை பாதியில் முடித்தோம். ஆனால், அனைத்து மனுக்களையும் ஆவணப்படுத்தி, அறிக்கையாக தயார்படுத்தி, அரசிடம் கொண்டு சென்று அழுத்தம் கொடுப்போம். இதுபோன்ற சட்டவிரோத கல்குவாரிகளை ஊக்குவிப்பதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும், இவ்வாறு கூறினார்.

