100 வயது பாட்டியின் குடும்ப சங்கம விழா: ஐந்து தலைமுறையை சேர்ந்த, 97 பேரன் பேத்திகள்
100 வயது பாட்டியின் குடும்ப சங்கம விழா: ஐந்து தலைமுறையை சேர்ந்த, 97 பேரன் பேத்திகள்
ADDED : ஆக 24, 2025 08:35 PM

திருப்பூர்:திருப்பூரை சேர்ந்த அன்னபூரணி என்னும் அன்னக்கிளி ஆத்தாள். இவரது நுாறாவது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் குடும்ப சங்கம விழா கே.செட்டிபாளையத்தில் நடந்தது. இதில் அவரது 13 மகன், மகள்கள் மற்றும் 97 பேரன், பேத்திகள் இணைந்து பிரம்மாண்ட முறையில் கொண்டாடினர்.
அனைத்து குடும்ப உறுப்பினர்களும், திரண்ட நிகழ்வு குடும்ப உறவுகளின் மேன்மையை விளக்குவதாக அமைந்தது. அன்னக்கிளி ஆத்தாள் 12 வயதில் கிருஷ்ணசாமி என்பவரை மணந்தார். இவர்களுக்கு 6 மகன் 7 மகள் என 13 குழந்தைகள். இவர்கள் மூலம் 5 தலைமுறையை கண்ட பாட்டி தனது, 100வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இதில் அனைவரும் ஒரே மாதிரியான உடைகள் அணிந்து குடும்ப போட்டோ எடுத்துக் கொண்டு பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்றனர். மேலும், பாட்டியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர்.
இதுகுறித்து மூதாட்டி கூறியதாவது:
இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 5 தலைமுறை பேரன் பேத்திகள் உடன், 100வது பிறந்தநாள் கொண்டாடுவது தனது பாக்கியம். அந்த காலத்தில் சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற உணவுகள் இந்த காலத்தில் இல்லை. அசைவ உணவை தான் விரும்பி சாப்பிடுவேன். வாரத்தில், 3 நாட்கள் அசைவ உணவு சாப்பிடுவேன். குழந்தைகள் குறித்த கேள்வியை யார் கேட்டாலும் சொல்ல மாட்டேன். 13 குழந்தைகள் என்றால் கண் பட்டுவிடும் என்பதால் அவர் இதனை எப்போதும் சொல்ல மாட்டேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.