ஆறு தலைமுறையினர் அபூர்வ சந்திப்பு; வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த உறவினர்கள் நெகிழ்ச்சி!
ஆறு தலைமுறையினர் அபூர்வ சந்திப்பு; வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த உறவினர்கள் நெகிழ்ச்சி!
ADDED : ஆக 24, 2025 08:54 PM

போத்தனூர்: ஒரே குடும்பத்தின் 6 தலைமுறைகளை சேர்ந்த சொந்தங்கள் ஒன்று கூடிய நிகழ்வு, கோவையில் இன்று நடந்தது. பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த உறவினர்கள், தங்கள் உறவுகளை கண்டு ஆனந்தக்கண்ணீர் வடித்தனர்.
கோவை, அன்னூர் அருகேயுள்ள கஞ்சப்பள்ளியை சேர்ந்தவர் கருப்பண்ண நாடார். முதல் தலைமுறையான மனைவி குப்பாயி உடன் கள்ளுக்கடைகள் நடத்தி, நில சுவான்தாராக ஐந்து மகன்கள், ஒரு மகளுடன் வாழ்ந்தார். இவர்களது மூன்றாம் தலைமுறையான கிருஷ்ணசாமி முதல் எட்டாம் தலைமுறை வரையிலானோரின் சந்திப்பு, சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. விழா ஆறாம் தலைமுறையை சேர்ந்த கல்லூரி மாணவி நித்யஸ்ரீயின் பரதத்துடன் துவங்கியது. தொடர்ந்து உறவு முறை குறித்த கேள்விக்கு பதில் கூறு, போட்டி நடந்தது.
இதையடுத்து கல்லூரி பேராசிரியர் சகுந்தலவள்ளி, ஆசிரியர் (ஓய்வு) கஸ்தூரிபாய் ஆகியோர் உறவுகள் குறித்து பேசினர்.
இதனை தொடர்ந்து சைவ, அசைவ மதிய விருந்து பரிமாறப்பட்டது. உறவுகள் தங்களுக்குள் ஊட்டி கொடுத்து, மகிழ்ந்தனர். மதியத்திற்கு மேல் களை கட்டியது, ஆடல், பாடல். சிட்டுகள் முதல் மூத்தோர் வரை தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
ஒரே விதமான ஆடை உடுத்தி, மற்றவர்களை திகைப்படைய செய்தனர். மாலை தேனீர் விருந்துடன் விழா நிறைவடைந்தது.
முன்னதாக குழுவாக புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் விட்டுப்போன, பார்த்திடாத உறவுகளை மறக்க இயலாத நினைவுகளாக்கி. திரண்டு வந்த கண்ணீரை அடக்கியும், மற்றவர்களுக்கு தெரியாமல் மறைத்தும், துடைத்தும் மீண்டும் சந்திப்போம் எனும் உற்சாகத்துடன் விடைபெற்றனர்.
கஞ்சப்பள்ளி கருப்பண்ண நாடார் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையான முத்துசாமி - அலுமேலு தம்பதி, போத்தனூர் அடுத்த மேட்டூரில் ஓட்டல் நடத்திய முதல் நபராவார். இவர்களது மகனான நான்காம் தலைமுறையை சேர்ந்த, கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் முருகேசன் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.
அவர் கூறியதாவது:நான் வி.எஸ்.எஸ்.எம். பள்ளியில் படித்தேன். ஆறு ஆண்டுகட்கு முன் பள்ளியில், 1956 முதல் படித்த அனைவரையும் ஒன்று சேர்க்கும் முன்னாள் மாணவர்கள் சங்கமம் எனும் நிகழ்ச்சியை நடத்தினோம். அது என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவே இக்குடும்ப நிகழ்ச்சிக்கு ஒரு வித்தாகும். இதில் மூன்றாம் தலைமுறையை சேர்ந்த, 85 வயது கிருஷ்ணசாமி முதல், இரண்டு வயதான எட்டாம் தலைமுறையை சேர்ந்த எனது கொள்ளு பேத்தி வனீரா, மற்றும் மாரியாயின் மகள் வழி கொள்ளு பேத்தி இனியா சதாசிவத்தின் கொள்ளு பேரன், பேத்திகளான யாதவ் சரண், சாய் சரண் வரை பங்கேற்றனர்.
அதுபோல் ஆஸ்திரேலியாவில் ஓட்டல் நடத்தி வரும் எனது மகள் பூங்கொடி, லண்டனில் வசிக்கும் முத்துகுமார், சவுதியில் வசிக்கும் மகேஸ்வரி, துபாயில் வசிக்கும் அபிராமி, இந்துமதி ஆகியோரும் கலந்துகொண்டனர். உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்த கிடைத்த ஒரு நிகழ்ச்சியான இதற்கு எனது மகள் பூங்கொடி எனக்கு முழு உதவியாக இருந்தார்.இவ்வாறு அவர் கூறினார்.