விபத்து ஏற்படுத்தி விவசாயிக்கு இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி
விபத்து ஏற்படுத்தி விவசாயிக்கு இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி
ADDED : மார் 27, 2024 08:50 PM

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் டூவீலரில் சென்ற விவசாயி மீது அரசு பஸ் மோதி விபத்து ஏற்படுத்திய வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்ஸை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
திண்டுக்கல் கேற்பு சோலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி மனோகரன் 63. இவர் 2019ல் தனது டூவீலரில் கேற்பு சோலைப்பட்டியிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்தார். பித்தளைப்பட்டி பிரிவு அருகே டூவீலர் வந்தபோது செம்பட்டியிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பஸ் இவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் மனோகரன் கால் உள்ளிட்ட பகுதிகளில் முறிவு ஏற்பட்டு அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து மனோகரன், திண்டுக்கல் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் அரசு பஸ் தன் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதால் போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். வழக்கறிஞர் சாக்ரடீஸ் இவ்வழக்கில் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட விவசாய மனோகரனுக்கு அரசு போக்குவரத்து கழகம் ரூ. 3.60,000 இழப்பீடு தொகை வழங்க உத்தரவிட்டார்.
இத்தனை ஆண்டுகளாக இழப்பீடு வழங்கவில்லை. மீண்டும் மனோகரன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி நீதிமன்ற ஊழியர்கள் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் தேனி டு புதுக்கோட்டை செல்ல காத்திருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.

