/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
35 ஆண்டாகியும் வீட்டிற்கு பட்டா கிடைக்கல சிரமத்தில் ஜெ.ஜெ., காலனி குடியிருப்போர்
/
35 ஆண்டாகியும் வீட்டிற்கு பட்டா கிடைக்கல சிரமத்தில் ஜெ.ஜெ., காலனி குடியிருப்போர்
35 ஆண்டாகியும் வீட்டிற்கு பட்டா கிடைக்கல சிரமத்தில் ஜெ.ஜெ., காலனி குடியிருப்போர்
35 ஆண்டாகியும் வீட்டிற்கு பட்டா கிடைக்கல சிரமத்தில் ஜெ.ஜெ., காலனி குடியிருப்போர்
ADDED : டிச 24, 2025 05:45 AM
காரியாபட்டி: தொகுப்பு வீடு கட்டி 35 ஆண்டுகளாகியும் இதுவரை பட்டா கிடைக்கவில்லை, குடிநீர் சப்ளை இல்லாததால் விலைக்கு வாங்கி பயன்படுத்துவது, தேங்கி நிற்கும் கழிவுநீர், வீதியில் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தால் குண்டும் குழியுமாகி நடமாட சிரமம் ஏற்படுவது என காரியாபட்டி ஜெ.ஜெ., காலனி குடியிருப்போர் நல சங்கத்தினர் சிரமத்தில் உள்ளனர்.
குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் வெண்டி, ராக்கு, சுதா, செல்வி, சுந்தரம்மாள், மாணிக்கி, விஜயலட்சுமி கூறியதாவது:
காரியாபட்டியில் ஜெ. ஜெ., காலனி கட்டப்பட்டு 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அடிப்படை வசதிகள் கிடையாது. இதுவரை குடிநீர் சப்ளை இல்லை. விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். குடிநீருக்காகவே மாதம் ஏராளமாக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. புழக்கத்திற்கான உப்பு தண்ணீர் உள்ளூரில் ஆழ்துளை கிணறு அமைத்து சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தற்போது சேதம் அடைந்து வருவதுடன் சுற்றிலும் அசுத்தமாக கிடக்கிறது. வீதியில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டி பல மாதங்கள் ஆகின. தண்ணீர் சப்ளையும் இல்லை. சேதமடைந்த வீதிகளை சீரமைக்கவும் இல்லை. இரவு நேரங்களில் நடமாட முடியாமல் இடறி விழ நேரிடுகிறது. தொகுப்பு வீடுகள் சேதமடைந்து எப்போது இடிந்து விழுமோ என்கிற அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம். சீரமைக்க வேண்டி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. தற்போது கடன் வாங்கி சொந்த செலவில் சின்ன சின்ன பராமரிப்பு வேலைகளை செய்து வருகிறோம். 35 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை வீடுகளுக்கு பட்டா வழங்கவில்லை. லோன் வாங்க வங்கிக்கு சென்றால் பட்டா, நிரந்தர முகவரி கேட்கின்றனர். படித்தவர்கள் ஏராளமானோர் இருந்தும் சுய தொழில் செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். ஓடையில் கழிவுநீர் தேங்குவதுடன், குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதில் பன்றிகள் கிளறுவதால் துர்நாற்றம் ஏற்பட்டு குடியிருக்க முடியவில்லை. கொசு உற்பத்தியாகி பகலிலே கடித்து சிறுவர்களின் உடலில் தடிப்பு ஏற்படுகிறது. சமுதாயக்கூடம் இல்லாததால் நிகழ்ச்சிகள் நடத்த முடியாமல் தவித்து வருகிறோம். மனமகிழ் மன்றத்தில் அவ்வப்போது நிகழ்ச்சி நடத்தி வந்தோம். தற்போது அதுவும் சேதுமடைந்து நிகழ்ச்சி நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாறுகால் சேதம் அடைந்து படுமோசமாக உள்ளது. பஸ் நிறுத்தம் கேட்டும் நடவடிக்கை இல்லை. மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக இருப்பதால் படுமோசமாக இருக்கிறது. மந்தை அம்மன் கோயில் முன் பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டினோம். குப்பைகள், வாறுகால் சுத்தம் செய்ய யாரும் வரவில்லை. பட்டா வழங்கி, குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றனர்.

