/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமடைந்த மேல்நிலை தொட்டி; சகதியால் அவதி
/
சேதமடைந்த மேல்நிலை தொட்டி; சகதியால் அவதி
ADDED : ஜூலை 23, 2025 12:18 AM
ஸ்ரீவில்லிபுத்துார்; சேதமடைந்த மேல்நிலை குடிநீர்தொட்டி, பெண்கள் சுகாதார வளாகமின்றி அவதி, சுகாதாரக் கேடு, ரேஷன் பொருட்கள் வாங்க சிரமப்படும் நிலை, நூலகமின்றி படிக்க முடியாத இளைஞர்கள் என பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஸ்ரீவில்லிபுத்துார் பெரும்பள்சேரி தெரு மக்கள் வசித்து வருகின்றனர்.
இது குறித்து இப்பகுதி குடியிருப்பாளர்கள் செந்தில்குமார், பாண்டியராஜ், பாலமுருகன், விஜய் ஆனந்த், சரவணகுமார் கூறியதாவது; எங்கள் பகுதியில் ஒரு சில தெருக்கள் திருவண்ணாமலை ஊராட்சியிலும், பல்வேறு தெருக்கள் ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் வருவதால் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்திக்கிறோம். இங்குள்ள 130 வீடுகள் ஊராட்சி கீழ் வருவதால் ரேஷன் பொருட்கள் வாங்க அய்யம்பட்டி தெருவிற்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே எங்கள் தெருவிற்கென பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளான நிலையில் எங்கள் பகுதியில் பெண்களுக்கான சுகாதார வளாக வசதி இல்லை. மழை, இரவு நேரங்களில் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை தவிர்க்க நவீன சுகாதார வளாகம் கட்டித்தர வேண்டும். தெருவிற்கு நுழையும் இடத்தில் உள்ள வடமலைக்குறிச்சி கண்மாய் நீர்வரத்து ஓடையின் பாலத்தில் தடுப்பு சுவர் முழுமையாக கட்டி தர வேண்டும்.
அனைத்து தெருக்களிலும் தேங்கி கிடக்கும் கழிவுகளை அப்புறப்படுத்தி வாறுகால்களை சுத்தம் செய்து தூய்மையான நிலையை ஏற்படுத்த வேண்டும். தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் கிடைக்கிறது.
இதனை சீரான முறையில் வழங்க வேண்டும். எங்கள் தெருவில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் அரசின் போட்டி தேர்வுக்கு தயாராகும் வகையில் நவீன நூலகம், தெருக்களில் சேதமடைந்த கல் பாலத்தை சீரமைக்கவும், தெருக்களில் பேவர் பிளாக் ரோடு, தெரு விளக்குகள் அமைக்கவும், மயானத்திற்கு செல்ல மெட்டல் ரோடு வசதி செய்யவும், சாவடியின் பின்புறம் உள்ள தெருவில் புதிய வாறுகால், சமுதாயக்கூடத்தை சீரமைக்கவும், ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய்கள் இணைப்பு வழங்கப்படாத வீடுகளுக்கும் உடனடியாக குழாய்கள் இணைப்பு வழங்க வேண்டும்.
இதற்கு உள்ளாட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கையாகும். என்றனர்.

