/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பள்ளிக்கும், மாணவர்களுக்கும் பெருமை சேர்க்கும் ஆசிரியர்
/
அரசு பள்ளிக்கும், மாணவர்களுக்கும் பெருமை சேர்க்கும் ஆசிரியர்
அரசு பள்ளிக்கும், மாணவர்களுக்கும் பெருமை சேர்க்கும் ஆசிரியர்
அரசு பள்ளிக்கும், மாணவர்களுக்கும் பெருமை சேர்க்கும் ஆசிரியர்
ADDED : செப் 07, 2025 05:19 AM

வி ழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளிக்கு மட்டுமின்றி, மாணவர்களுக்கும் சிறந்த சேவைகளை செய்து பெற்றோர் மத்தியில் நன்மதிப்பை பெற்றவராக இடைநிலை ஆசிரியர் ஜூலியட் விண்ணரசி திகழ்ந்து வருகிறார்.
மரக்காணம் அருகே கூனிமேடு குப்பத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், கடந்த 14 ஆண்டுகளாக ஜூலியட் விண்ணரசி இடைநிலை ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் சிறந்த ஆசிரியராக பணிபுரிய வேண்டும் என கனவு லட்சியத்தோடு, பள்ளி பருவத்தை முடித்தார்.
கடந்த 2006ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். பணியில் சேர்ந்த அதே ஆண்டில் இவர், சிறந்த ஆசிரியருக்கான 'சிகரம் தொட்ட ஆசிரியர்' என்ற சான்றிதழை, கலெக்டரிடம் பெற்றார்.
இவர் எந்த பள்ளிக்கு சென்றாலும், அந்த பள்ளியின் வளாகத்தை பசுமையாக மாற்ற 1,500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வளர்த்துள்ளார்.
பள்ளியில் நடக்கும் தேசிய விழாவின் போது மரக்கன்றுகள் நடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தனது ஒவ்வொரு பிறந்தநாளிலும், 100 மரக்கன்றுகளை மாணவர்களிடம் வழங்கி, அவர்களுக்கு மரம் நடுவதன் அவசியத்தை உணர்த்தி வருகிறார்.
கடந்த, 2017 ம் ஆண்டு பசுமை பள்ளிக்கான விருதை பெற்றார். கடந்த, 2019 ம் ஆண்டு கொரோனா ஊரடங்கில், கடலுார் மாவட்டத்தில் துவங்கிய கல்வி ரேடியோவில் இரு ஆண்டுகள் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி, பாடம் நடத்துதல், பாடல் பாடுதல், கதை கூறுதல் ஆகியவற்றை நிகழ்த்தி காட்டினார்.
இதன் மூலம் மாணவர்களை வீட்டிலிருந்தே பாடல், கதை, அடிப்படை செயல்பாடுகளை ஆடியோவாக பதிந்து கல்வி ரேடியோவில் பங்கேற்க செய்து நுாற்றுக்கும் மேற்பட்ட சான்றிதழ்களை பெற்று தந்தார். ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தினார்.
அரசு பள்ளியை மேம்படுத்த, ஆசிரியர் ஜூலியட் விண்ணரசி, ஓவியம் தீட்டும் பணிகளை செய்துள்ளார். பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வரும் மாணவர்களுக்கு சிறு, சிறு அன்பளிப்பு வழங்கியதோடு, ஏழை மாணவர்களுக்கு குறிப்பேடுகள், புத்தகம், பை, உடைகளை வழங்கி வருகிறார்.
எண்ணும், எழுத்தும் திட்டத்தில் மாநில, மாவட்ட, வட்டார கருத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார். இதன் மூலம் வகுப்பறைக்கு இவரே கற்றல் கற்பித்தல் உபகரணங்களை செய்து காட்சிபடுத்தியுள்ளார்.
புத்தக கண்காட்சியில் சிறந்த முறையில், பணிபுரிந்ததற்காக, இவருக்கு அப்போதைய கலெக்டர் பழனி சான்றிதழ் வழங்கினார். இவர் பணியாற்றி வரும் பள்ளியில் மாணவர்கள் சிரமமின்றி அமர்ந்து எழுதுவதற்காக தனது பணம், ரூ.30 ஆயிரம் மதிப்பீட்டில் வண்ண மேசையை வழங்கி உள்ளார்.
அரசு பள்ளி முன்னேற்றத்திற்காக பல நிறுவனங்களிடம் இவர் உதவிகள் கேட்டு மாணவர்களுக்கு தேவையான புத்தகப்பை, குறிப்பேடுகள், வகுப்பறைகளை வண்ணமயமாக்குதல் உள்ளிட்டவற்றை செய்துள்ளார். சினிமா இசையமைப்பாளர் இமான் நிறுவனம் மூலம், பள்ளியில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டுவதற்கு உதவி செய்துள்ளார்.
இது குறித்து அவர், பள்ளியை சிறந்த முறையில் மாற்ற தான் ஒரு கருவியாக இருக்க முடிந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைவதாக, தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவர்களின் வகுப்பறை செயல்பாடுகளை முகநுால், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், யூ டியூப் ஆகிய சமூக வலைதங்களில் பதிவு செய்து, அவர்களுக்கான பாராட்டை வெகுமதியாக பெற்று தந்துள்ளார்.
மாணவர்களுக்கு பள்ளி முடிந்தவுடன், மாலை நேர வகுப்பாக பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம், சிலம்பம் ஆகிய வகுப்புகளை நடத்தினார்.
இதனால், இவருக்கு மாணவர்கள், பெற்றோர் மத்தியில் நல்ல மரியாதை உள்ளது. இவர், மாணவர்களுக்கு மட்டுமின்றி, பள்ளியின் தரத்தை மேம்படுத்தவும், மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும் பல முயற்சிகளை செய்துள்ளார்.
மாணவர்களுக்கும், பள்ளிக்கும் சேவை செய்ய கணவரும், குடும்பத்தாரும் கொடுத்த உறுதுணையும், ஊக்கமும் மிக முக்கிய காரணமாகும் என பெருமிதத்தோடு, ஜூலியட் விண்ணரசி தெரிவித்துள்ளார்.