/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டம்; அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறுமா?
/
பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டம்; அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறுமா?
பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டம்; அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறுமா?
பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டம்; அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறுமா?
ADDED : டிச 24, 2025 06:59 AM

திருப்பூர்: கொங்கு மண்டலத்தில், நீர்வளம் மேம்பட, பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டம் தொடர்பான அறிவிப்பை, தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சியினர், தங்களது தேர்தல் அறிக்கையில் வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நீலகிரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரங்களில் இருந்து வரும் மழைநீரை ஆதாரமாக கொண்ட பவானி ஆற்று நீரை மையப்படுத்தி தான், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கான குடிநீர் மேம்பாட்டு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
இம்மாவட்டங்களில் உள்ள, 1045 குளம், குட்டைகளை நிரப்பும் வகையில், 1,916 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்ட அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் கூட, பவானி ஆற்று நீரை மையமாக வைத்து தான் செயல்படுகிறது.
கொங்கு மண்டலத்தில், நீர் வளம் பெருக, அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தை விரிவுப்படுத்த, பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது, சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியில் தி.மு.க. ஈடுபட்டுள்ள நிலையில், மீண்டும் இக்கோரிக்கை வலுத்துள்ளது.
இது குறித்து, பாண்டியாறு பூர்வாங்க பாசன சபை தலைவர் பிரபு கூறியதாவது:
நீலகிரி மாவட்டம், ஓவேலி பகுதியில், பாண்டியாறு உற்பத்தியாகிறது. தொடர்ந்து, தமிழக எல்லைக்குள் வந்து, கேரளாவுக்குள் நுழைந்து, அரபிக்கடலில் கலந்து வீணாகிறது. பாண்டியாறு நீரை, தமிழக எல்லைக்குள்ளேயே திருப்பி, தெப்பக்காடு வழியாக மாயாற்றில் கலக்கும் வகையில் ஏற்பாடு செய்தால், அந்த நீர், பவானி ஆற்றுக்கு வரும்.
இதன் வாயிலாக குறைந்தபட்சம், 5 டி.எம்.சி. நீர் கூடுதலாக கிடைக்கும். இத்திட்டத்தை நிறைவேற்ற, 100 கோடி ரூபாய் நிதி போதும் என, தமிழக மூத்த பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஏற்கனவே, தமிழக அரசிடம் விரிவான திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது, த.வெ.க. போன்று புதிதாக துவங்கியுள்ள கட்சி தலைவர்கள் கூட, அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டம் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். கொங்கு மண்டலத்தில் நீர்வளம் மேம்படுத்தப்பட வேண்டும் என பேச்சை துவக்கி உள்ளனர்.
எனவே, அரசியல் கட்சிகளும், தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட துவங்கியுள்ளன.
அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், பாண்டியாறு - மாயாறு இணைப்புத் திட்டம் குறித்த அறிவிப்பு இடம் பெற வேண்டும் என, அரசியல் கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி வருகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

