/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெருநாய்கள் பெருக்கம்; உள்ளாட்சிகளின் மெத்தனமே காரணம்
/
தெருநாய்கள் பெருக்கம்; உள்ளாட்சிகளின் மெத்தனமே காரணம்
தெருநாய்கள் பெருக்கம்; உள்ளாட்சிகளின் மெத்தனமே காரணம்
தெருநாய்கள் பெருக்கம்; உள்ளாட்சிகளின் மெத்தனமே காரணம்
ADDED : ஆக 24, 2025 07:05 AM

''தெரு நாய்கள் தொல்லை அதிகரிக்க உள்ளாட்சி நிர்வாகங்களின் மெத்தன போக்கு தான் காரணம்'' என, இந்திய விலங்குகள் நல வாரிய உறுப்பினர் முருகேஸ்வரி கூறினார்.
அவர் கூறியதாவது:
தமிழகத்தில், தெருநாய்களால் கால்நடைகள் கடிபடுவதும், ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்களால் மனிதர்கள் கடிபட்டு, பலியாவதும் தொடர்கிறது. தெரு நாய்கள் கொல்லப்படக் கூடாது; மாறாக, அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் 'ஏபிசி' எனப்படும் விலங்கு பிறப்பு கட்டுப்பாடு சட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
தெரு நாய்களை கட்டுப்படுத்தும் முழுப் பொறுப்பு, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு தான் உண்டு. 'ஏபிசி' விதிப்படி உள்ளாட்சிகளில் கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும். இதில், முதன்மை கால்நடை மருத்துவ அலுவலர் அல்லது அவருக்கு நிகரான அந்தஸ்து பெற்ற அதிகாரி, மாவட்ட அளவில் செயல்படும் விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச்சங்க பிரதிநிதி, அங்கீகரிக்கப்பட்ட விலங்கு நலச்சங்க பிரதிநிதி, உள்ளாட்சி நிர்வாகத்தினரால் அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவர், பொதுமக்கள் பிரதிநிதி, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் இடம் பெற்றிருக்க வேண்டும். இவர்கள், அந்தந்த பகுதியில் உள்ள தெரு நாய்களின் நடமாட்டம், அவற்றால் ஏற்படும் பிரச்னை, அவற்றை பிடிப்பதற்கான சூழல், கருத்தடை செய்வதற்கான ஏற்பாடு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், கடந்த 24 ஆண்டாக இத்திட்டத்தை உள்ளாட்சி நிர்வாகத்தினர் மேற்கொள்ளாததன் விளைவு தான், தற்போது தெரு நாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்திருக்கிறது. நாய்கள், மனிதர்களை கடிக்கின்றன; ஆடு உள்ளிட்ட கால்நடைகளை தாக்குகின்றன. இந்திய விலங்குகள் நல வாரியத்தை பொறுத்தவரை, நாய், ஆடு உட்பட அனைத்து விலங்கினங்களின் நலனும் முக்கியம். எனவே, 'ஏபிசி' திட்டத்தை உள்ளாட்சி அமைப்புகள் சரிவர மேற்கொள்வது மட்டும் தான் தெரு நாய்களை கட்டுப்படுத்த ஒரே வழி.