/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காட்டுப்பன்றிகளால் கதிர் சேதம் நிவாரணம் வழங்க கோரிக்கை
/
காட்டுப்பன்றிகளால் கதிர் சேதம் நிவாரணம் வழங்க கோரிக்கை
காட்டுப்பன்றிகளால் கதிர் சேதம் நிவாரணம் வழங்க கோரிக்கை
காட்டுப்பன்றிகளால் கதிர் சேதம் நிவாரணம் வழங்க கோரிக்கை
ADDED : டிச 23, 2025 07:54 AM
உடுமலை: அறுவடைக்கு தயாரான மக்காச்சோள கதிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியுள்ளதால், ஆண்டியகவுண்டனுார் சுற்றுப்பகுதி விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
உடுமலை ஆண்டியகவுண்டனுார், பெரிசனம்பட்டி, குட்டியகவுண்டனுார் சுற்றுப்பகுதிகளில், பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில், மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பயிர்களில் கதிர் பிடித்து அறுவடைக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இரவு நேரங்களில், 30க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகளை உள்ளடக்கிய கூட்டம், விளைநிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருகிறது.
பயிர்களை கீழே சாய்த்து, கதிர்களை ருசி பார்ப்பதுடன், நாள்தோறும், ஆயிரக்கணக்கான பயிர்களை கீழே சாய்த்து சேதப்படுத்துகின்றன. அவற்றை கட்டுப்படுத்த வரப்பில், வண்ண சேலை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டும் எவ்வித பலனும் இல்லை.
மக்காச்சோள விதை, நடவு, படைப்புழு தாக்குதலுக்கு இரு முறை மருந்து தெளிப்பு, களையெடுத்தல், உரமிடுதல் என ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவிட்டுள்ளனர். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தவும் அதிக செலவாகியுள்ளது.
இது குறித்து அப்பகுதியைச்சேர்ந்த விவசாயி துரைராஜூ கூறுகையில், ''பெரிசனம்பட்டி பகுதியில், 4 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளேன். அறுவடைக்கு தயாரான மக்காச்சோள கதிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகிறது. நாள்தோறும் அரை ஏக்கர் பரப்புக்கு சேதம் ஏற்படுகிறது. இதனால், ஓராண்டுக்கான வருவாய் முற்றிலும் இழந்துள்ளோம். வனத்துறை, வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்,'' என்றார்.

