/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வனத்துறை நிலங்கள் ஆக்கிரமிப்பு ; மீட்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
வனத்துறை நிலங்கள் ஆக்கிரமிப்பு ; மீட்க விவசாயிகள் வலியுறுத்தல்
வனத்துறை நிலங்கள் ஆக்கிரமிப்பு ; மீட்க விவசாயிகள் வலியுறுத்தல்
வனத்துறை நிலங்கள் ஆக்கிரமிப்பு ; மீட்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : டிச 23, 2025 07:53 AM

உடுமலை: உடுமலை, அமராவதி வனச்சரக பகுதியில், பல நுாறு ஏக்கர் பரப்பிலான வன நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன; அவற்றை மீட்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலையிலுள்ள மாவட்ட வன அலுவலகத்தில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் சரவணன் தலைமை வகித்தார்.
வனச்சரகர்கள் வாசு, புகழேந்தி, செந்தில்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
இதில் விவசாயிகள் பேசியதாவது : வன எல்லை மட்டுமின்றி, 60 கி.மி., துாரத்திலுள்ள குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளிலும், அமராவதி ஆயக்கட்டு பகுதிகளிலும் ஏராளமான காட்டுப்பன்றிகள் வசித்து வருவதோடு, நெல், கரும்பு, மக்காச்சோளம் என அனைத்து பயிர்களையும் அழித்து வருகிறது.
வனத்துறை சார்பில், இழப்பீடு குறைந்தளவே வழங்கப்படுகிறது. இழப்பீடு கணக்கெடுப்பதற்குள், பல ஏக்கர் பயிர்களை நாசம் செய்கின்றன.
மடத்துக்குளம் பகுதியில், கரும்பு தோட்டத்திற்குள் ஏராளமான பன்றிகள் பதுங்கியுள்ளதால், நீர் பாய்ச்ச கூட முடியாமல், உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாக விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
ஒரு சில பகுதிகளில், காட்டுப்பன்றிகளைப்பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். ஒரு மாதமாகியும் ஒரு பன்றியை கூட பிடிக்கவில்லை. ஒவ்வொரு பகுதியிலும் நுாற்றுக்கணக்கில் பல்கி, பெருகியுள்ள நிலையில், அவற்றை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்.
துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல அரசு அனுமதியளித்தும், இதுவரை ஆரம்ப கட்ட பணிகள் கூட மேற்கொள்ளவில்லை. உடனடியாக விவசாயிகளிடம் விண்ணப்பம் பெற்று, குழு வாயிலாக சுடுவதற்கான நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொள்ள வேண்டும்.
சங்கராமநல்லுார் தெற்கு, ஆண்டிபட்டி பகுதியில், கடமான்கள் அதிகளவு வனத்தை விட்டு வெளியேறி, மா மரம் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகிறது.
மருள்பட்டியிலுள்ள பாழடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மயில்கள் வசித்து வருவதோடு, சுற்றுப்புறத்திலுள்ள, 3 கிராமங்களில் பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.
வனத்திற்குள் ரோடு அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது, குறித்து ஆய்வு செய்ய வேண்டும். உடுமலை, அமராவதி வனச்சரக பகுதியில், வன எல்லையோரங்களில், நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வன நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இதனால், வன விலங்குகள் பாதை மாறி, கிராமங்களுக்குள் புகுந்து வருகிறது. திருமூர்த்திமலையில் வன நில ஆக்கிரமிப்பு குறித்து புகார் அளித்தும், வனத்துறையினர் கண்டு கொள்ளவில்லை. வன நிலங்கள் ஆக்கிரமிப்பை பாரபட்சமின்றி வனத்துறையினர் உடனடியாக அகற்றவும், வனச்சூழலை மீட்க வேண்டும்.
இவ்வாறு, பேசினர்.

