/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் மாயமாகிறது! துறைகள் அலட்சியத்தால் தொடரும் அவலம்
/
கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் மாயமாகிறது! துறைகள் அலட்சியத்தால் தொடரும் அவலம்
கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் மாயமாகிறது! துறைகள் அலட்சியத்தால் தொடரும் அவலம்
கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் மாயமாகிறது! துறைகள் அலட்சியத்தால் தொடரும் அவலம்
ADDED : டிச 24, 2025 06:02 AM

உடுமலை: விடுமுறை நாட்களில் பள்ளி மாணவ, மாணவியர் விளையாடவும், இளைஞர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளவும், ஊராட்சிகள் தோறும் அமைக்கப்பட்ட கிராமப்புற மைதானங்கள் பராமரிப்பின்றி, புதர் மண்டிக்காணப்படுகிறது. பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியும், ஊராட்சி, ஒன்றிய நிர்வாகத்தினர் அலட்சியத்தால், மைதானங்கள் மாயமாகியுள்ளது அனைத்து தரப்பினரையும் வேதனையடையச்செய்துள்ளது.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில், 72 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில், மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டுத்திறனை மேம்படுத்தவும், ஆர்வம் ஏற்படுத்தவும், மைதானங்கள் இல்லாமல் இருந்தது.
கடந்த, 2006ல், தி.மு.க., ஆட்சிக்காலத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், கிராம விளையாட்டு மைதானங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கிராமத்திலுள்ள அரசு நிலம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு, அடிப்படை உடற்பயிற்சிகள் செய்வதற்கான உபகரணங்கள், கபடி, வாலிபால் விளையாடுவதற்கான கட்டமைப்பு மற்றும் குழந்தைகளுக்கான சறுக்கு, ஊஞ்சல் உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டது.
பல்வேறு விளையாட்டு சாதனங்களும், ஊராட்சி நிர்வாகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. மைதானங்கள் பராமரிப்புக்கும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
விளையாட்டு மேம்பாட்டு திட்டம் இந்த திட்டம், சில ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்தது. அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், மைதானங்கள் பராமரிப்பு குறித்து சில ஆண்டுகள் கண்டுகொள்ளப்படவில்லை. பின்னர், கடந்த, 2020ல், 'அம்மா' விளையாட்டு மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில், கிராமம்தோறும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மைதானங்கள் மேம்பாடு செய்யப்பட்டது. மேலும், விளையாட்டு இளைஞர் நலத்துறை சார்பில், 76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும், கிராமப்புற மைதானங்களில், உபகரணங்கள் வாங்கி பொருத்தப்பட்டது.
தொடர் பராமரிப்பு இல்லாதது மற்றும் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, மூன்று ஒன்றியத்துக்குட்பட்ட 72 ஊராட்சிகளிலும், ஒரு மைதானம் கூட முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பல மைதானங்களில், முறையான பராமரிப்பு இல்லாமல், உபகரணங்கள் துருப்பிடித்து பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி விட்டது. மைதானங்கள் பயன்பாடு இல்லாமல், புதர் மண்டி மாயமாகி வருகிறது. ஆக்கிரமிப்பால் பல இடங்களில் மைதானமே இல்லாத நிலை உள்ளது.
விளையாட்டு ஆர்வலர்கள் கூறியதாவது:
தற்போது கிராமப்புற இளைஞர்களிடமும், விளையாட்டு ஆர்வம் வெகுவாக குறைந்து விட்டது. பள்ளி விடுமுறை நாட்களில், மாணவ, மாணவியர், இளைஞர்களை விளையாட செய்யவும், உடற்பயிற்சி செய்யவும், மைதானம் முக்கிய தேவையாக உள்ளது.
ஆனால், மைதானம் மேம்பாட்டுக்கு, பெயரளவுக்கு திட்டங்களை செயல்படுத்துவதுடன், தொடர் பராமரிப்பு செய்யப்படுவதில்லை. ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும், ஒரு வகையான திட்டத்தை அறிமுகம் செய்து விட்டு, பின்னர், கைவிடுவது தொடர்கதையாக உள்ளது. எனவே, கிராமப்புற மைதானங்களை பராமரித்து, தரமான உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்க வேண்டும்.
கிராமம் வாரியாக விளையாட்டு போட்டிகள் நடத்தி, இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். இது குறித்து, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். இவ்வாறு, தெரிவித்தனர்.

