/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இயற்கையே கருவானது காலண்டர் உருவானது
/
இயற்கையே கருவானது காலண்டர் உருவானது
ADDED : டிச 14, 2025 07:30 AM

இ யற்கையையே கருவாகக் கொண்டு, திருப்பூர், முதலிபாளையம், 'நிப்ட் டீ' கல்லுாரி மாணவர்களின் 2026 புதிய காலண்டர் உருவாகியுள்ளது.
ஜப்பானில் பிரசித்தி ஜெர்ரி பிளாசம் மலர்களைக் கொண்டு தயாரான உயர் ரக பேஷன் ஆடையை இக்கல்லுாரி மாணவர்கள் தயாரித்துள்ளனர். இதை அணிந்த மாணவியின் புகைப்படம் ஜன. மாத பக்கத்தை அலங்கரிக்கிறது.
பிப். மாதம் - காகித ரோஜா மூலம் உருவான ஆடை; மார்ச் - கோடைக்கால துவக்கத்தை உணர்த்தும் வகையில், வாடிய பூக்களை அடிப்படையாக கொண்ட ஆடை; ஏப்ரல் - தங்க பூக்களின் டிசைனில் மிளிரும் ஆடை; மே - கருந்தேள் ஆடை அணிந்த மாடல் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
ஜூன் - ஊதா பூக்கள், ஜூலை - கருப்பு, வெள்ளை மலர்கள், ஆகஸ்ட் - டால்மேஷன் நாயைப் பிரதிபலிக்கும்வகையில், வெள்ளை மற்றும் கருப்பு புள்ளிகள் கொண்ட ஆடை, பக்கங்களை மெருகூட்டுகிறது.
பனிக்கரடியின் தோலை மையமாக கொண்டு செப்டம்பர்; குளுமையான ரோஜா பூக்களை நினைவு படுத்தும் ஆடையுடன் அக்டோபர்; பறக்கும் பூக்களுடன் நவம்பர்; ஜொலிக்கும் தங்க நிற பூக்களுடன் டிசம்பர் என, 12 மாதத்துக்கான பக்கங்களையும் அழகுற உருவாக்கியுள்ளனர்.
டிசைனர்; மாடல்; புகைப்படம் மற்றும் எடிட்டிங் செய்த மாணவ, மாணவியரின் பெயர் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
கல்லுாரி தலைமை டிசைனர் பூபதி விஜய் கூறுகையில், ''ஆடை வடிவமைப்பில் மாணவ, மாணவியர் 24 பேர்; மாடலாக 12 பேர் இணைந்து தயாரித்துள்ளனர்.
எந்த ஒரு மையக்கருவையும் அடிப்படையாக கொண்டு, கலை நயம் மிக்க பேஷன் ஆடைகளை தயாரிக்க முடியும் என்பதை மாணவர்களின் இந்த படைப்பு, வெளிப்படுத்துகிறது'' என்றார்.
திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்கள், பின்னலாடை துறை சார்ந்த சங்கங்களுக்கு, இந்த காலண்டர்கள் வழங்கப்பட உள்ளன.

