/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை தரம் பிரிப்பு; மக்கள் ஒத்துழைப்பு
/
குப்பை தரம் பிரிப்பு; மக்கள் ஒத்துழைப்பு
ADDED : ஆக 24, 2025 07:01 AM

சு த்தம், சுகாதாரமான சுற்றுச்சூழல் என்பது, வீடுகளில் இருந்து தான் துவங்குகிறது; இதன் செயல்பாடு தான் திடக்கழிவு மேலாண்மை.
மக்கள் மத்தியில், இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் 'ட்ரீம் 20 பசுமை' அமைப்பினர், சுதந்திர தினத்தன்று களப்பணியில் இறங்கினர். திருப்பூர் மாநகராட்சி, ஜெய்வெல் இம்பெக்ஸ் நிறுவனம், நெகிழி இல்லா திருப்பூர் மற்றும் திருப்பூர் மெட்டல் டவுன் ரோட்டரி அமைப்பினர் இணைந்து இப்பணியை மேற்கொள்கின்றனர்.
வீடுகளில் இருந்து, குப்பையை தரம் பிரித்து வாங்கும் பணிக்கு 'பிள்ளையார் சுழி' போட்டனர். 'என் குப்பை - என் பொறுப்பு' என்ற தலைப்பில், 134 வீடுகளில் இருந்து குப்பையை தரம் பிரித்து வாங்கும் பணி துவங்கியது.
குப்பையை, மக்கும் மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரித்து வழங்க, வீடு தோறும் பச்சை மற்றும் சிவப்பு நிற தொட்டிகள் வழங்கப்பட்டன. ஓரிரு வீடுகளில் உள்ளவர்களை தவிர, பெரும்பாலான வீடுகளில் உள்ளவர்கள், குப்பையை தரம் பிரித்து வழங்க துவங்கினர்.
பிளாஸ்டிக் கவர், சோப்பு, ஷாம்பு கவர், காகித பொருட்கள், அட்டை பெட்டியை தனியாகவும்; காய்கறி, பழங்களின் கழிவுகள், உணவு மீதங்கள் தனியாகவும்; சானிட்டரி பேட்ஸ், டயாப்பர்கள் தனியாகவும்; கண்ணாடி தேங்காய் சிரட்டை, மின்சாதன கழிவுகளை தனியாகவும் பிரித்து வழங்க இல்லத்தரசிகள் துவங்கியுள்ளனர். மாநகராட்சி துாய்மைப் பணியாளர்களும், தினமும், குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து, தரம் பிரிக்கப்பட்ட நிலையிலேயே குப்பையை வாங்கிச் செல்கின்றனர்.
ஒத்துழைப்பு அருமை 'ட்ரீம் 20' பசுமை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் கூறியதாவது:
வீடுகளில் இருந்து, தினமும் பெறப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பையில், 50 சதவீதம் உர பயன்பாடுக்கும், 25 முதல், 30 சதவீத குப்பை, மறுசுழற்சிக்கும் போக, 20 சதவீத குப்பை மட்டுமே நேரடியாக நிலத்துக்கு செல்கிறது. பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட அட்டை பெட்டிகளை மறுசுழற்சிக்கு அனுப்ப முடிவதில்லை.
சிலர் உணவு மீதத்தை, பாலிதீன் கவரில் நிரப்பி வெளியேற்றுகின்றனர்; இதை கையாள்வதும் சிரமமாக உள்ளது. இதுபோன்ற நிறை, குறைகளை ஆராய்ந்து சரி செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறோம். குடியிருப்புவாசிகளின் சிறப்பான முறையில் ஒத்துழைக்கின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.