ADDED : ஆக 24, 2025 07:01 AM

எஜமானர்களின் விசுவாசி; காவலுக்கு கெட்டிக்காரன்; துப்பறிவதில் வல்லவன்.
இப்படிப் பன்முக திறமையுடன் படைக்கப்பட்ட ஒரு உயிரினம் தான் நாய்கள். நாய்களில் பலவகையுண்டு; ஒவ்வொன்றுக்கும் ஒரு குணமுண்டு.
வீடு மற்றும் விவசாயிகளின் தோட்டத்தையும், விவசாயிகளால் வளர்க்கப்படும் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளின் காவலனாகவும், வளர்ப்பு நாய்கள் இருக்கின்றன. செல்லப்பிராணிகளை நேசிக்கும் மனிதர்கள் ஏராளம். அவர்கள் வளர்க்கும் நாய்களுக்கும், அவர்களுக்கும் இடையேயான ஆழமான பாசத்தை போற்றும் வகையில், ஆண்டுதோறும், ஆக., 26ம் தேதி சர்வதேச நாய்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
அச்சுறுத்தும் 'ரேபிஸ்' உயிரிழப்புகள்
'இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், 20,000 பேர் 'ரேபிஸ்' தொற்றால் இறக்கின்றனர்' என்கிறது மத்திய அரசின் புள்ளி விபரம். தெரு நாய்கள் விவகாரத்தை கையில் எடுத்த சுப்ரீம் கோர்ட், தெரு நாய்களை கட்டுப்படுத்த, அதனால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க, சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.'சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க தடை விதிக்க முடியாது. மாநகராட்சி ஊழியர்கள் தெருநாய்களை பிடிக்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம். பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்த வேண்டும். எங்கே பிடிக்கப்படுகிறதோ, மீண்டும் அங்கேயே நாய்களை விட்டு வர வேண்டும். அதே நேரம், இந்த உத்தரவு 'ரேபிஸ்' நோயால் பாதித்த வெறிநாய்கள் மற்றும் மூர்க்கத்தனமான நாய்களுக்கு பொருந்தாது. அவற்றை பிடித்து வந்து காப்பகத்தில் பராமரிக்க வேண்டும். தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க தடை விதிக்கப்படுகிறது' என வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.