/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீர் ஓடையாக மாறிய நத்தம்மேடு பவானி நகர்
/
கழிவுநீர் ஓடையாக மாறிய நத்தம்மேடு பவானி நகர்
ADDED : டிச 23, 2025 05:55 AM

திருநின்றவூர்: திருநின்றவூர், நத்தம்மேடு பவானி நகரில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
திருநின்றவூர் அடுத்த நத்தம்மேடு ஊராட்சி, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது. இங்குள்ள 9வது வார்டு, பவானி நகரில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு, கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், பவானி நகர் முதல் பிரதான சாலை, பவானி நகர் முதல் குறுக்கு தெருவில் உள்ள சில வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், சாலையில் தேங்குகிறது.
ஆறு மாதங்களுக்கு மேலாக இதே நிலை என்பதால், 'சாலையா... கழிவு நீர் ஓடையா' என சந்தேகம் எழுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால், காய்ச்சல், தோல் நோய் உள்ளிட்ட பாதிப்புகளால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்து, கழிவுநீரை சாலையில் வெளியேற்றும் வீடுகளுக்கு அபராதம் விதிக்கவும், கழிவுநீர் கால்வாய் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

