ADDED : ஆக 25, 2025 03:49 AM
உத்தமபாளையம், : உத்தமபாளையம் நர்சரியில் திருடிய பிக்கப் வேனை குமுளி மலையில் உருட்டி விட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
உத்தமபாளையம் மெயின்பஜார் வீதியில் வசிப்பவர் அனந்தராமன் 62, இவர் உத்தமபாளையம் சின்னமனூர் தேசிய நெடுஞ்சாலையில் மலர் செடிகள், தென்னங்கன்றுகள் விற்பனை செய்யும் நர்சரி நடத்தி வருகிறார். கடந்த ஆக. 20 இரவு நர்சரியை வழக்கம் போல் பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலை நர்சரிக்கு வந்த போது அங்கு நிறுத்தியிருந்த பிக்கப் வேன், இரும்பு தளவாட சாமான்கள், சிசிடிவி கேமரா உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதில் கூடலூர் வீரணத்தேவர் தெரு சிரஞ்சீவி 37, கூடலூர் எல்லை தெரு ஸ்டாலின் 38, கம்பம் மணி நகர் ராஜ்குமார் 27 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஒருவர் தப்பியோடினார்.
வேனை திருடியவர்கள் குமுளிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு திருடிய இரும்பு தளவாட பொருள்களை விற்று அதில் கிடைத்த பணத்தை கொண்டு மது அருந்தியுள்ளனர். கூடலூருக்கு திரும்பிய போது குமுளி மலைப் பாதையில் வேனை வனப்பகுதிக்குள் உருட்டி விட்டுள்ளனர். தற்போது சேதமடைந்து பள்ளத்திற்குள் வேன் கிடக்கிறது. வேன் மீட்கப்படவில்லை.