/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பைரவருக்கு சம்பக சஷ்டி விழா நிறைவு: ந.வைரவன்பட்டியில் சம்பக சூரசம்ஹாரம்
/
பைரவருக்கு சம்பக சஷ்டி விழா நிறைவு: ந.வைரவன்பட்டியில் சம்பக சூரசம்ஹாரம்
பைரவருக்கு சம்பக சஷ்டி விழா நிறைவு: ந.வைரவன்பட்டியில் சம்பக சூரசம்ஹாரம்
பைரவருக்கு சம்பக சஷ்டி விழா நிறைவு: ந.வைரவன்பட்டியில் சம்பக சூரசம்ஹாரம்
ADDED : நவ 27, 2025 06:56 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த சம்பகசஷ்டி விழா நேற்றுடன் நிறைவடைந்தது. ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயிலில் சூரசம்ஹாரத்துடன் சம்பக சஷ்டி விழா நிறைவடைந்தது.
திருத்தளிநாதர் கோயிலில் தியான நிலையில் மேற்கு நோக்கி எழுந்தருளிய யோகபைரவருக்கு கார்த்திகையில் சம்பகசஷ்டி விழா நடைபெறும்.நவ. 21ல் பைரவர் சன்னதியில் அஷ்ட பைரவ யாகத்துடன் விழா துவங்கியது. தினசரி காலை மற்றும் மாலையில் அஷ்டபைரவர் யாகம் துவங்கி மூலவர் யோகபைரவருக்கு அபிேஷக, ஆராதனை நடந்தன.
நிறைவு நாளை முன்னிட்டு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் காலை வழிபாட்டில் பங்கேற்றார். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழா நடந்த ஆறுநாட்களிலும் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாட்டினை தேவஸ்தானம், சம்பக சஷ்டி விழாக்குழுவினர் செய்தனர்.
சம்பக சூரசம்ஹாரம் ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் வயிரவசுவாமி கோயிலில் நவ.20ல் காப்புக்கட்டி சம்பகசஷ்டி விழா துவங்கியது. மறுநாள் முதல் ஆறுநாட்கள் விழா நடந்தது. தினசரி காலையில் ஹோமம், தீபாராதனையும், இரவில் பைரவர் வெள்ளி ரதத்தில் புறப்பாடும் நடந்தது. ஐந்தாம் நாளில் மாலையில் விடுதிக்கு சுவாமி எழுந்தருளி அஷ்டபைரவ அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. பின்னர் ஊஞ்சலில் சுவாமி புறப்பாடு நடந்தது.
நேற்று காலை 10:00 மணிக்கு வயிரவருக்கு அபிேஷக,ஆராதனைகள் நடந்தன. இரவு 7:00 மணி அளவில் விநாயகர், துர்க்கை, மார்த்தாண்ட பைரவர், வளரொளிநாதர், வடிவுடையம்பாள் புறப்பாடு நடந்தது.
தொடர்ந்து விநாயகர், துர்க்கை அம்மன் சூரனை வதம் செய்ய முயன்றனர். பின்னர் வெள்ளித் தேரில் எழுந்தருளிய மார்த்தாண்ட பைரவர் அம்பாளிடம் பிரார்த்தித்து திரிசூலம் வாங்கி சூரனை வதம் செய்தார். திரளாகக் கூடி பக்தர்கள் சம்பக சூரசம்ஹாரத்தை தரிசித்தனர்.
பின்னர் பஞ்சமூர்த்திகள் திருவீதி வலம் வந்தனர். ஏற்பாட்டினை ஏழகப் பெருந்திருவான வயிரவன்கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள், விழாக்கமிட்டியினர் செய்தனர்.

