/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அக்.23 முதல் மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்
/
அக்.23 முதல் மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : அக் 09, 2024 04:03 AM
ராமநாதபுரம் : கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் அக்.23 முதல் ராமநாதபுரத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே சின்ன ஏர்வாடி கிராமத்தில் மன்னார் வளைகுடாவை சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் நாட்டுப்படகு மற்றும் சிறு தொழில் மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி தொழிலுக்கு ஏற்படும் தொடர் நெருக்கடி, பொதுவான பிரச்னைகள், மீன் வளத்துறையின் செயல்பாடுகள் குறித்தும் விவாதித்து தீர்வு காண மீன் வளத்துறை அரசு செயலாளர், இயக்குநர் பங்கேற்கும் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். கடல் வளம், மீன் வளத்தை அழிக்கும் சுருக்குமடி மீன் பிடிப்பு அரசால் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சுருக்குமடி வலையில் மீன் வளத்துறை அதிகாரிகள் ஆதரவுடன் ஆண்டு முழுவதும் நடந்து வருவதை தடுத்து மீன்கள், வலைகளை பறிமுதல் செய்ய வேண்டும்.
மீனவர்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் காஸ் சிலிண்டர் பயன்படுத்தி மீன் பிடிப்பதை முற்றிலும் தடை செய்து காஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்ய வேண்டும். விசைப்படகுகள் கரையில் இருந்து 5 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடிக்க தடை இருந்தும் மீறி செயல்படும் துாத்துக்குடி, மூக்கையூர், கீழக்கரை பகுதி விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் உள்ள மீனவர்கள் கூட்டங்களை நடத்தி அக்.23ல் ராமநாதபுரம் மீன் வளத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

