/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
தலையில்லாத புத்தர் சிலை புதுகை அருகே கண்டெடுப்பு
/
தலையில்லாத புத்தர் சிலை புதுகை அருகே கண்டெடுப்பு
ADDED : ஆக 27, 2025 03:01 AM

புதுக்கோட்டை:ஆவுடையார்கோவில் அருகே தலையில்லாத புத்தர் சிலையை தொல்லியல் ஆய்வு கழகத்தினர் கண்டறிந்தனர்.
தொல்லறிவியல் துறை ஆய்வாளர் மணிகண்டன் கூறியதாவது:
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் எல்லைக்குட்பட்ட பெரிய பாசன குளத்தின் அருகில், கருங்கல்லாலான தலையில்லாத புத்தர் சிலை கண்டறியப் பட்டது.
இந்த புத்தர் சிலை, 10ம் நுாற்றாண்டைச் சார்ந்த சிற்ப உருவ அமைப்புடன் காணப்படுகிறது. இது, 48 செ.மீ., உயரமும், 38 செ.மீ., அகலமும் கொண்டு, பீடத்தின் மீது அமர்ந்த நிலையில், தியான கோலத்தில் உள்ளது.
வலது மார்பில் மேலாடை, இடுப்பில் ஆடை, கழுத்தில் திரிவாலி, அகன்ற மார்பு, பரந்த தோள்கள், இடது உள்ளங்கையின் மீது வானோக்கிய வலது கையமைப்புடன் உள்ளது.
கழுத்தின் பக்கவாட்டில் பின்புறமாக உடைந்த நிலையில், பிரபையின் அடிப் பகுதி உள்ளது.
வலது கையின் கீழ்ப்பகுதி சிதைந்துள்ளது. சிலையின் தலைப்பகுதி அருகிலிருக்கும் வாய்க்காலில் இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில் அருகேயுள்ள கரூரில் நிலவளமுடைய அய்யனார் கோவிலில் ஒரு புத்தர் சிலையும், இரண்டாவது புத்தர் சிலை மணமேல்குடி அருகே வன்னிச்சிப்பட்டினத்தில், புதுக்கோட்டை, அரசு அருங்காட்சியக இணை இயக்குநர் பொறுப்பு வகித்த ராஜாமுகமது, 2002ம் ஆண்டு கண்டறிந்த நிலையில் அச்சிலை, 2008ல், காணாமல் போனது.
இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.