/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
ஆதார் இல்லாததால் பள்ளியில் மறுப்பு; 2 ஏழை மாணவர்கள் கல்வி முடக்கம்
/
ஆதார் இல்லாததால் பள்ளியில் மறுப்பு; 2 ஏழை மாணவர்கள் கல்வி முடக்கம்
ஆதார் இல்லாததால் பள்ளியில் மறுப்பு; 2 ஏழை மாணவர்கள் கல்வி முடக்கம்
ஆதார் இல்லாததால் பள்ளியில் மறுப்பு; 2 ஏழை மாணவர்கள் கல்வி முடக்கம்
ADDED : ஆக 19, 2025 01:26 AM
பெரம்பலுார்; 'ஆதார், பிறப்பு சான்றிதழ் இல்லாமல் பள்ளிக்கு வர வேண்டாம்' என, தலைமை ஆசிரியர் கூறியதால், இரு மாணவர்கள், பள்ளி செல்லாமல் வீட்டில் முடங்கி உள்ளனர். அவர்கள் கல்வியை தொடர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
பெரம்பலுார் மாவட்டம், பெண்ணைக்கோணம் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை -- சுகன்யா தம்பதியின் மகன்கள் செல்வகுமார், 12, மணிகண்டன், 13. இருவரும், லப்பை குடிகாடு கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கின்றனர்.
பெற்றோரை இழந்த இவர்களை, பாட்டி லட்சுமி வளர்க்கிறார். இவருக்கு போதிய விபரம் தெரியாததால், செல்வகுமார், மணிகண்டன் இருவருக்கும் இதுவரை ஆதார் கார்டு, பிறப்பு சான்றிதழ் வாங்கவில்லை.
சில நாட்களுக்கு முன், மாணவர்கள் இருவரையும், ஆதார் கார்டு எடுத்து வருமாறு பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்தார். அப்போது, தங்கள் பெற்றோர் இறந்து விட்டதால், நாங்கள் ஆதார் கார்டு வாங்கவில்லை என, தெரிவித்தனர்.
ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே, இப்பள்ளியில் படிக்க முடியும் என, தலைமை ஆசிரியர் கறாராக தெரிவித்தார்.
இதில், விரக்தியடைந்த மாணவர்கள் இருவரும், ஒரு வாரத்துக்கு மேலாக பள்ளிக்கு செல்லாமல், வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
பெற்றோரை இழந்த வேதனையில் உள்ள மாணவர்கள், ஆதார் கார்டு இல்லை என்பதற்காக, தற்போது கல்வியையும் இழந்து நிற்கின்றனர். இவர்களுக்கு ஆதார் கார்டு வழங்கவும், இவர்கள் படிப்பை தொடரவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்களின் பாட்டி லட்சுமி கோரிக்கை விடுத்தார்.