/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த நிழல் குடை: பயணிகள் அதிருப்தி
/
சேதமடைந்த நிழல் குடை: பயணிகள் அதிருப்தி
ADDED : அக் 20, 2025 11:29 PM

கூடலூர்: கூடலூர் புளியம்பாறை பகுதியில் சேதமடைந்த நிழல் குடை, பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கூடலூர், கோழிக்கோடு சாலை மரப்பாலம் அருகே, அமைந்துள்ளது புளியாம்பாறை கிராமம். இப்பகுதிக்கு, கூடலூரில் இருந்து காலை, மாலை இயக்கி வந்த அரசு பஸ் தற்போது நிறுத்தப் பட்டுள்ளது.
மக்கள் போக்குவரத்துக்கு அவ்வப்போது வரும் மினி பஸ், தனியார் ஜீப், ஆட்டோவை நம்பியுள்ளனர்.
புளியம்பாறையில், பயணிகள் காத்திருக்க வசதியாக நெல்லியாளம் நகராட்சி சார்பில், 2007ல், நிழல் குடை அமைக்கப்பட்டது. அந்த நிழல் குடை தற்போது, பராமரிப்பு இன்றி சேதமடைந்து பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க, நடவடிக்கை இல்லாததால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'புளியாம்பாறை மற்றும் அதன் சுற்றுவட்ட கிராம மக்கள் புளியாம்பாறை பகுதிக்கு வந்து, நிழல் குடையில் காத்திருந்து பல்வேறு பணிகளுக்காக வாகனங்களில் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர்.
தற்போது, நிழல் குடை பயன்படுத்த முடியாத வகையில் சேதமடைந்துள்ளது.
இதனை அகற்றி, புதிய நிழல் குடை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

