/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முன்பதிவு பெட்டிகளில் பொருட்களுக்கு பாதுகாப்பில்லை; பொதுப் பயணிகள், வெளிநபர்களால் நடக்கிறது திருட்டு
/
முன்பதிவு பெட்டிகளில் பொருட்களுக்கு பாதுகாப்பில்லை; பொதுப் பயணிகள், வெளிநபர்களால் நடக்கிறது திருட்டு
முன்பதிவு பெட்டிகளில் பொருட்களுக்கு பாதுகாப்பில்லை; பொதுப் பயணிகள், வெளிநபர்களால் நடக்கிறது திருட்டு
முன்பதிவு பெட்டிகளில் பொருட்களுக்கு பாதுகாப்பில்லை; பொதுப் பயணிகள், வெளிநபர்களால் நடக்கிறது திருட்டு
UPDATED : ஆக 25, 2025 06:25 AM
ADDED : ஆக 25, 2025 02:44 AM

மதுரை: மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் பாண்டியன், வைகை உள்ளிட்ட ரயில்களில் பொதுப் பயணிகளால் முன்பதிவு பயணிகளின் உடமைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதென குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரையில் இருந்தும், மதுரை வழியாகவும் சென்னை, பெங்களூரு, டில்லி என பல நகரங்களுக்கும் ரயில்கள் செல்கின்றன.
தொலைதுார ரயில்கள் என்பதால் இவை பகல், இரவில் தொடர்ந்து இயங்குகின்றன. இந்த ரயில்களில் பெரும்பாலும் அதிக கூட்டம் உள்ளது. இதனால் பலர் பொதுப் பெட்டியில் கூட்ட நெரிசலில் பயணிக்கும் நிலையுள்ளது. ஸ்டேஷனில் இருந்து ரயில் கிளம்பியதும் பரிசோதகர்கள் (டி.டி.இ) முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட் சரிபார்ப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
அவர்கள் சென்ற பிறகு நள்ளிரவில் ஸ்டேஷன்களில் ரயில் நிற்பதை பயன்படுத்தி, பொதுப் பெட்டியில் பயணிப்போர் அல்லது வெளியாட்கள், 'ஏசி' அல்லாத முன்பதிவு பெட்டிக்குள் ஏறி, 'பெர்த்'களின் அடியிலும், நடைபாதையிலும் படுத்துக் கொள்கின்றனர். அவர்களில் சிலர் பயணிகளின் பர்ஸ், நகை, அலைபேசிகளை திருடிச் செல்கின்றனர். இப்படி பொருட்களை பறிகொடுத்த சிலர் புகார் கொடுக்காமல் சென்றுள்ளனர்.
கண்காணிப்பு௴ கேமரா௴௴
வேண்டும்
பயணிகள் சிலர் கூறியதாவது: முன்பதிவு பெட்டியில் உரிய டிக்கெட் இல்லாதவர் ஏறினால் அவர்களை கண்டிப்புடன் இறக்கிவிட வேண்டும். 'பெர்த்'களை தவிர பிற இடங்களில் படுக்க அனுமதிக்க கூடாது. தொடர் கண்காணிப்பு இல்லாததால் டி.டி.இ.,க்கள் சென்றபின் சிலர் முன்பதிவு பெட்டியில் ஏறுகின்றனர். பாண்டியன் உள்ளிட்ட முக்கிய ரயில்களில் முதல்வகுப்பு 'ஏசி' பெட்டிக்கு பிரத்யேக டி.டி.இ., மற்ற 'ஏசி' பெட்டிகளுக்கு 2 முதல் 3 டி.டி.இ.,க்கள், 3 ஸ்லீப்பர் பெட்டிகளுக்கு ஒரு டி.டி.இ., என பணியில் இருப்பர். அவர்கள் டிக்கெட் பரிசோதனை முடித்த பின்பும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, ரயில்வே போலீசார் உதவியுடன் அடிக்கடி ரோந்து செல்ல வேண்டும். பெட்டியின் கதவுகளை பூட்ட வேண்டும். பெட்டிகளில் ஏறுவோரை கண்காணிக்க சி.சி.டிவி., கேமராக்களை நிறுவ வேண்டும்.
மனிதாபிமானத்துடன் அணுகுகிறோம்
டி.டி.இ.,க்கள் தரப்பில் கூறியதாவது: டிக்கெட் சரிபார்ப்பின் போது, ஒரே டிக்கெட்டில் உள்ள 4 பேரில் ஒருவருக்கு மட்டும் 'கன்பார்ம்' ஆகியிருக்கும். அந்நிலையில் கர்ப்பிணி, மாற்றுத்திறனாளிகள் போன்றோருடன் பயணிப்போரை மனிதாபிமான அடிப்படையில் அனுமதிக்க வேண்டியுள்ளது. மற்றபடி உரிய டிக்கெட் இல்லாதோரை முன்பதிவு பெட்டியில் இருக்க நாங்கள் அனுமதிப்பதில்லை. 'ஏசி' பெட்டிகளில் நுாறு சதவீதம் அனுமதிப்பதே இல்லை. நெடுந்துார ரயில்களில் ஆர்.ஏ.சி.,யில் (ரிசர்வேஷன் அகெயின்ஸ்ட் கேன்சலேஷன்) பயணிப்போர்தான் நீண்ட நேரம் உட்கார முடியாமல் கீழே படுத்திருப்பர். மற்றவர்கள் படுக்க வாய்ப்பில்லை. ஆர்.பி.எப்., போலீசாருடன் கண்காணிப்பிலும் ஈடுபடுகிறோம் என்றனர்.