ADDED : டிச 24, 2025 06:41 AM
மதுரை: மதுரை அண்ணாநகர் உழவர் சந்தையில் தேசிய விவசாயிகள் தினவிழா நடந்தது. வேளாண்மை விற்பனைத்துறை வேளாண்மை அலுவலர் சித்தார்த் வரவேற்றார்.
மதுரை விற்பனைக்குழு செயலாளர் அழகுராஜா பேசியதாவது: மதுரையில் ஆறு இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதை மதுரை விற்பனைக்குழு உறுதிபடுத்துகிறது. மேலும் விளைபொருட்களை குறைந்த வாடகையில் சேமித்து வைக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய மின்னணு சந்தையான இ -- நாம் திட்டத்தின் மூலம் விவசாயிகள் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் தங்களது விளைபொருட்களை நல்ல விலைக்கு வெளிப்படைத்தன்மையுடன் விற்கலாம் என்றார்.
அனைத்து திட்டங்களின் விபரத்தையும் myscheme.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம் என முதுநிலை விற்பனை அலுவலர் பனி தெரிவித்தார். அக்மார்க் ஆய்வக வேளாண்மை அலுவலர் மலர்விழி அக்மார்க் தரச்சான்று பெறும் விதத்தை விளக்கினார். உசிலம்பட்டி வேளாண்மை அலுவலர் சுந்தரபாண்டியன், உழவர் உற்பத்தியாளர் வேணுகோபால் ரெட்டி நன்றி கூறினார். மாநில வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, மத்திய அரசின் வேளாண்மை விற்பனை மற்றும் ஆய்வு இயக்குநரகம் ஏற்பாடுகளைச் செய்தன.

