/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முன் அனுமதியுடன் சட்டப்படி போராடலாம்; கோர்ட் உத்தரவு;
/
முன் அனுமதியுடன் சட்டப்படி போராடலாம்; கோர்ட் உத்தரவு;
முன் அனுமதியுடன் சட்டப்படி போராடலாம்; கோர்ட் உத்தரவு;
முன் அனுமதியுடன் சட்டப்படி போராடலாம்; கோர்ட் உத்தரவு;
ADDED : செப் 18, 2025 04:36 AM
மதுரை : 'முன் அனுமதி பெற்று சட்டப்படி போராட்டங்களை நடத்த வேண்டும்,' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனு: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிதாக அணை கட்டுவதை தடுக்க வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த திருச்சியிலிருந்து ரயிலில் புறப்பட்டோம். டிக்கெட் வைத்திருந்தும் செங்கல்பட்டு அருகே எங்களை ரயிலிலிருந்து கீழே இறக்கி விட்டனர். அமைதியாக போராட்டம் நடத்த டில்லி செல்ல எங்களை தடுக்கக்கூடாது என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: ஒரு காலத்தில் ரயிலில் பயணித்த மகாத்மா காந்தி செல்லுபடியாகும் டிக்கெட் வைத்திருந்தும், கீழே இறக்கிவிடப்பட்டார் என்பதை நினைவுகூராமல் இருக்க முடியாது. அச்சம்பவம் ஒரு இயக்கத்திற்கு உத்வேகம் அளித்தது. திருப்புமுனையாக அமைந்தது. இறுதியில் இந்த தேசத்திற்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்தது. சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக, நமது அரசியலமைப்பு அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அவற்றில் சுதந்திரமாக நடமாடுதல், அமைதியாக ஒன்றுகூடுதல், குறைகளுக்கு தீர்வு காணும் உரிமை ஜனநாயக பங்கேற்பின் மையமாக அமைகின்றன.
ரயிலில் 'டிக்கெட்' இல்லாமல் பயணம் செய்தல் போன்ற சில சூழ்நிலைகளில் மட்டுமே கீழே இறக்கிவிட அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. செல்லுபடியாகும் டிக்கெட் வைத்திருக்கும் பயணி ஒருவரை போராட்டம் நடத்த விரும்புவதால் அவரை பாதியில் இறக்கிவிட சட்டம் அனுமதிக்காது. அப்படி இறக்கிவிடப்பட்டால், அது ஒரு குற்றம். அதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அலைபேசி கோபுரங்களில் ஏறுவது, மூத்த குடிமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது அல்லது பொது போராட்டங்களில் மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகளை பயன்படுத்துவது உள்ளிட்ட மனுதாரரின் போராட்ட முறைகள் சட்டப்பூர்வமான போராட்டத்துடன் பொருந்தாது. போராட்டம் நடத்துவதற்கு முன் சட்டப்படி அனுமதி பெற வேண்டும். அனுமதி வழங்கும் போது விதிக்கப்படும் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வழக்கில் ரயிலிலிருந்து கீழே இறக்கிவிடப்பட்டதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க மனுதாரர் தவறிவிட்டார். இச்சூழலில் நீதிமன்றம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. மனுதாரர் முன் அனுமதி பெற்று சட்டப்படி போராட்டங்களை நடத்த வேண்டும். அவர் செல்லுபடியாகும் டிக்கெட்டுகளை வைத்திருக்கும் போது, பயணம் செய்வதை தன்னிச்சையாக தடுக்க அதிகாரிகளுக்கு உரிமை இல்லை. இதில் தடை ஏதேனும் ஏற்பட்டால், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள மனுதாரருக்குஉரிமை உண்டு. மனு பைசல் செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.