/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஆய்வு உயர்நீதிமன்றம் உத்தரவு
/
சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஆய்வு உயர்நீதிமன்றம் உத்தரவு
சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஆய்வு உயர்நீதிமன்றம் உத்தரவு
சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஆய்வு உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : நவ 15, 2025 05:40 AM
மதுரை: தமிழகத்தில் பட்டாசு தொழிலை ஒழுங்குபடுத்த பட்டாசு கழகம் அமைக்க தாக்கலான வழக்கில், சிவகாசி பகுதியிலுள்ள பட்டாசு ஆலைகளை நீதிமன்றத்திற்கு உதவி செய்யும் நடுநிலை அறிவுரையாளர் (அமிகஸ் கியூரி) வழக்கறிஞர் டி.கீதா ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில் 450 பதிவு செய்த பட்டாசு ஆலைகள் உள்ளன. 2024 முதல் 2025 ஆகஸ்ட்வரை பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் 77 பேர் இறந்துள்ளனர். பெரிய நிறுவனங்கள் தங்கள் பெயர்களில் பட்டாசுகளை சந்தையில் விற்பனை செய்கின்றன. அவை உண்மையில் ஒப்பந்த அடிப்படையில் உரிமம் இல்லாத சிறு யூனிட்கள் மூலம் உற்பத்தியை மேற்கொள்கின்றன. அங்கு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாததால் விபத்துகள்ஏற்படுகின்றன.
பட்டாசு தொழிலை ஒழுங்குபடுத்த தமிழக பட்டாசு கழகம் அமைக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.
சாத்துார் மேலதாயில்பட்டி ராஜாத்தி. இவரது தந்தை சுந்தரம் பட்டாசு ஆலை விபத்தில் பலியானார். பட்டாசு ஆலை விபத்துக்களை தடுக்க கோரி 2014 ல் சட்டக் கல்லுாரி மாணவியாக இருந்த ராஜாத்தி உயர்நீதிமன்றக் கிளை பதிவாளருக்கு கடிதம் எழுதினார். இதனடிப்படையில் 2104ல் பதிவாளர் (நீதித்துறை),'பட்டாசு ஆலைகள் முறையாக உரிமம் பெற்று செயல்படுகிறதா என அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். வரும் காலங்களில் விபத்து நடைபெறாமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார். இதை 2014 ல் தானாக முன்வந்து பொதுநல வழக்காக இரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு ஏற்றது.
இரு வழக்குகளையும் நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு நேற்று விசாரித்தது.
துணை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டாளர் (பெசோ)கந்தசாமி ஆஜரானார்.அரசு தரப்பில்,'விருதுநகர் மாவட்டத்தில் 842 பட்டாசு ஆலைகள் உள்ளன. சிவகாசி பகுதியில் 300 பட்டாசு ஆலைகள் உள்ளன,' என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
கந்தசாமி: 15 கிலோவரை பட்டாசு தயாரிக்க கலெக்டர் உரிமம் வழங்குகிறார். 15 கிலோவிற்கு மேல் தயாரிக்க 'பெசோ' உரிமம் வழங்குகிறது. இரு உரிமங்களுக்கும் வேறுபாடு உள்ளது என்றார்
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இவ்வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவி செய்யும் நடுநிலை அறிவுரையாளர் வழக்கறிஞர் டி.கீதா சிவகாசி பகுதி சிறு, நடுத்தர, பெரிய பட்டாசு ஆலைகளில் நவ.28 முதல் 29 வரை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். துணை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டாளர் பங்கேற்க வேண்டும். விசாரணை டிச.12க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.

