/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சொத்துவரி முறைகேட்டில் கணவர் கைதுராஜினாமா செய்யும் முடிவில் மதுரை மேயர் தி.மு.க., தலைமை நடவடிக்கையால் கவுன்சிலர்கள் கலக்கம்
/
சொத்துவரி முறைகேட்டில் கணவர் கைதுராஜினாமா செய்யும் முடிவில் மதுரை மேயர் தி.மு.க., தலைமை நடவடிக்கையால் கவுன்சிலர்கள் கலக்கம்
சொத்துவரி முறைகேட்டில் கணவர் கைதுராஜினாமா செய்யும் முடிவில் மதுரை மேயர் தி.மு.க., தலைமை நடவடிக்கையால் கவுன்சிலர்கள் கலக்கம்
சொத்துவரி முறைகேட்டில் கணவர் கைதுராஜினாமா செய்யும் முடிவில் மதுரை மேயர் தி.மு.க., தலைமை நடவடிக்கையால் கவுன்சிலர்கள் கலக்கம்
ADDED : ஆக 14, 2025 04:45 AM

மதுரை: மதுரை மாநகராட்சியில் நடந்த ரூ.பல கோடி சொத்துவரி விதிப்பு முறைகேட்டில் கணவர் கைதானதை தொடர்ந்து மேயர் இந்திராணி ராஜினாமா செய்யும் முடிவில் உள்ளார். இதற்கிடையே மேயர் வரை நடவடிக்கை பாய்ந்துள்ளதால் இவ்வழக்கில் தொடர்புடைய ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், கட்சி பிரமுகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இம்மாநகராட்சியில் 2023, 2024ல் 150க்கும் மேற்பட்ட வணிக கட்டடங்களுக்கு அதிகாரிகள் 'பாஸ்வேர்டை' பயன்படுத்தி சொத்துவரியை குறைத்து ரூ.பல கோடி முறைகேடு நடந்ததாக அ.தி.மு.க., புகார் எழுப்பியது. 2024ல் கமிஷனராக இருந்த தினேஷ்குமார் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் பலருக்கு தொடர்புள்ளதாக தெரியவந்தது.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவால் ஆளுங்கட்சியை சேர்ந்த 5 மண்டல, 2 நிலைக் குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்தனர். பில் கலெக்டர்கள், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் என 19 பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
சுற்றி வளைக்கப்பட்ட மேயர் கணவர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் உதவி கமிஷனர், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பில் கலெக்டர்கள் என 18 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேயரின் கணவர் பொன்வசந்த்தையும் தனிப்படை போலீசார் நெருங்கும் தகவல் அறிந்து, மதுரை மாவட்ட நிர்வாகி ஒருவர் ஆலோசனைப்படி சென்னையில் முகாமிட்டு ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை சந்தித்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க பேச்சு நடத்தியுள்ளார்.
ஆனால் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் ஆளுங்கட்சி பிரமுகர்கள் யாரும் அவருக்கு உதவி செய்ய தயாராக இல்லை. இதையறிந்த மதுரை தனிப்படை போலீசார், ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த பொன்வசந்த்தை நேற்றுமுன்தினம் கைது செய்து நேற்று காலை மதுரை அழைத்து வந்தனர்.
தனிப்படை இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் கார் மூலம் வந்து கொண்டிருந்தபோது, தனக்கு நெஞ்சுவலிப்பதாக பொன்வசந்த் தெரிவித்துள்ளார். இதனால் அவரை பரிசோதிக்க நேரடியாக மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். டாக்டர்கள் அறிவுறுத்தல் காரணமாக அவர் அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மேயர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் மேயர் இந்திராணி உள்ளார். இருப்பினும் நேற்று இந்திராணியின் மேயர் பதவி குறித்து கட்சி தரப்பில் இருந்தோ, மேயர் தரப்பில் இருந்தோ எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.
தொடரும் கைது படலம் சொத்துவரி முறைகேடு வழக்கில் தொடர்புடையவர்களை மத்திய குற்றப் பிரிவு போலீசார் அடுத்தடுத்து கைது செய்து வருகின்றனர்.
குறிப்பாக ஓய்வு உதவி கமிஷனர் ரங்கராஜன், வரிவிதிப்புக் குழு தலைவரின் கணவர் கண்ணன் ஆகியோர் வாக்குமூலங்களில் அதிகாரிகள், மண்டல தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் என பலருக்கு முறைகேட்டில் தொடர்புள்ளது தெரியவந்துள்ளது.
கைது வரிசையில் மேயரின் கணவரை கடைசியாக கைது செய்யலாம் என்ற எதிர்பார்ப்பை மீறி முன்கூட்டியே கைது செய்து போலீசார் அதிரடி காட்டியுள்ளனர்.
இதனால் போலீசார் 'லிஸ்ட்'டில் உள்ள மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், ஆளுங்கட்சி பிரமுகர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வாய்ப்புள்ளது.