/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கி.கிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அதிகரிக்க வாய்ப்பு நீர்நிலை ஆக்கிரமிப்பால் தண்ணீரை சேமிப்பதில் சிக்கல்
/
கி.கிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அதிகரிக்க வாய்ப்பு நீர்நிலை ஆக்கிரமிப்பால் தண்ணீரை சேமிப்பதில் சிக்கல்
கி.கிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அதிகரிக்க வாய்ப்பு நீர்நிலை ஆக்கிரமிப்பால் தண்ணீரை சேமிப்பதில் சிக்கல்
கி.கிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அதிகரிக்க வாய்ப்பு நீர்நிலை ஆக்கிரமிப்பால் தண்ணீரை சேமிப்பதில் சிக்கல்
ADDED : அக் 28, 2025 01:53 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சராசரி அளவை விட, தென்மேற்கு பருவமழை, 22 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும் வடகிழக்கு பருவமழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால், மழைநீரை சேமிப்பதில் சிக்கல் உள்ளது.
ஆண்டு முழுவதும் ஜன., பிப்., மாதங்களில் பெய்யும் மழையை குளிர்கால மழை எனவும், மார்ச், ஏப்., மே மாதங்களில் பெய்யும் மழையை கோடை மழை எனவும், ஜூன், ஜூலை, ஆக., செப்., மாதங்களில் பெய்யும் மழையை தென்மேற்கு பருவமழை எனவும், அக்., நவ., டிச., மாதங்களில் பெய்யும் மழையை வடகிழக்கு பருவமழை எனவும் வகைப்படுத்துவர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை குளிர்காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். மழையின் அளவு மிக குறைந்த அளவிலேயே இருக்கும். அதேபோல கோடையிலும் மற்ற மாவட்டங்களை விட சுற்று குறைவாகவே இருக்கும். ஆனால், தென்மேற்கு பருவமழை மற்ற மாவட்டங்களை விட அதிகமாகவும், வடகிழக்கு பருவமழை சற்று குறைவாகவும் இருக்கும்.
நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை, சராசரி அளவை விட குறைந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜூன் முதல் செப்., முதல், 4 மாதங்களுக்கு பெய்யும் தென்மேற்கு பருவமழையின் சராசரி அளவு, 365.40 மி.மீ., ஆகும். ஆனால் நடப்பாண்டில், 283.33 மி.மீ., அளவே பெய்துள்ளது. இது சராசரி அளவை விட, 22 சதவீதம் குறைவு. கடந்த, 2020 முதல் தென்மேற்கு பருவமழை முறையே, 466.15 மி.மீ., 389.86, 626.47, 383.53, மற்றும் 364.04 மி.மீ., அளவில் பெய்த நிலையில் நடப்பாண்டில் குறைந்துள்ளனது. ஆனால் கோடை காலத்தில் பெய்யும் சராசரி மழை அளவான, 158.30 மி.மீ., அளவை விட, 57.26 சதவீதம், அதாவது, 248.94 மி.மீ., அளவில் மழை பெய்தது.
அதிகரிக்க வாய்ப்பு
நடப்பாண்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை குறைந்தபோதும், வடகிழக்கு பருவமழை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், 3 மாதங்களுக்கு பருவமழை காலம் தொடரும். மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழையின் சராசரி அளவு, 291.10 மி.மீ., ஆனால், கடந்தாண்டு, 519.24 மி.மீ., அளவில், அதாவது, 76 சதவீதம் அதிகமாக மழை பதிவானது. கடந்த இரு வாரங்களில் மட்டும், 177.96 மி.மீ., அளவில் மழை பெய்துள்ளது.
வரும் மாதங்களிலும் நல்லமழை பொழியும் பட்சத்தில், சராசரி அளவை விட அதிகளவில் மழை பெறும் வாய்ப்புள்ளதாக, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மாவட்டத்தில் ஆண்டுதோறும் பெய்யும் மழையின் சராசரி அளவு, 830.50 மி.மீ., ஆகும். கோடை மழை அதிகரித்த நிலையில் இதுவரை, 714.25 மி.மீ., பெய்துள்ளதால் நடப்பாண்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதுமான அளவு மழை பெய்துள்ளதாக, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.
மழைநீரை சேமிப்பதில் சிக்கல்
பருவமழை காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகளில் ஈடுபடுகிறது. நடப்பாண்டில் இதுவரை ஆண்டு சராசரி அளவு மழையை விட குறைந்த அளவில் மழை பெய்திருந்தாலும் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லாதது, நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இவற்றை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் கவனித்து ஆக்கிரமிப்புகளை அகற்றினால், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளின் அருகிலுள்ள ஏரிகள், நீர்நிலைகளுக்கு சென்று, நீரை சேமிக்கலாம். இல்லையெனில் தண்ணீர் சேமிப்பதில் சிக்கல் ஏற்படும்.

