/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பரந்துார் ஏர்போர்ட் பகுதிக்குள் பாலம் கட்டி நிதி வீணடிப்பு அரசியல் ஆதாயத்திற்கு கட்டியதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
/
பரந்துார் ஏர்போர்ட் பகுதிக்குள் பாலம் கட்டி நிதி வீணடிப்பு அரசியல் ஆதாயத்திற்கு கட்டியதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
பரந்துார் ஏர்போர்ட் பகுதிக்குள் பாலம் கட்டி நிதி வீணடிப்பு அரசியல் ஆதாயத்திற்கு கட்டியதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
பரந்துார் ஏர்போர்ட் பகுதிக்குள் பாலம் கட்டி நிதி வீணடிப்பு அரசியல் ஆதாயத்திற்கு கட்டியதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 10, 2025 01:43 AM

காஞ்சிபுரம்:பரந்துார் விமான நிலைய பகுதிக்குள், 4.28 கோடி ரூபாய் செலவில் கம்பன் கால்வாய் குறுக்கே கட்டப்பட்ட பாலம் வீணாகும் சூழல் உள்ளது. இதன் பின்னணியில், அரசியல் இருப்பதாக, சமூக ஆர்வலர்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டம், தைப்பாக்கம், கூரம், பெரிய கரும்பூர், சிறுவாக்கம், பரந்துார், தண்டலம், ஏகனாபுரம், மதுரமங்கலம் வழியாக, ஸ்ரீபெரும்புதுார் ஏரியை அடையும், கம்பன் கால்வாய், 44 கி.மீ., உடையது.
இந்த கால்வாய் வழியாக காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய தாலுகாக்களில், 85 ஏரிகள் நிரம்புகின்றன. இதன் வாயிலாக, 22,235 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பள்ளூர் - சோகண்டி சாலையில் இருந்து, கம்பன் கால்வாய் கடந்து சிங்கிலிபாடி, மேல் மதுமரங்கலம், கூத்தவாக்கம், தொடூர், நீர்வள்ளூர் ஆகிய கிராமங்கள் வழியாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சின்னையன்சத்திரம் பகுதிக்கு செல்கின்றனர்.
அதேபோல, சின்னையன்சத்திரம், நீர்வள்ளூர், கூத்தவாக்கம், தொடூர், மேல்மதுமரங்கலம், சிங்கிலிபாடி ஆகிய கிராம மக்கள் எடையார்பாக்கம், பேரம்பாக்கம் ஆகிய கிராமங்களுக்கு செல்கின்றனர்.
மழைக்காலங்களில், கம்பன் கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது, மேற்கண்ட கிராம மக்கள் இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க பாலம் கட்டித்தர வேண்டும் என, பல்வேறு கிராம மக்கள் இடையே கோரிக்கை எழுந்தது.
இதை ஏற்று, நபார்டு வங்கி நிதியுதவியுடன் 2022 - 23ம் நிதி ஆண்டு, 4.28 கோடி ரூபாய் மதிப்பில் கம்பன் கால்வாய் குறுக்கே பாலம் கட்டுவதற்கு, ஊரக வளர்ச்சி துறை அனுமதி அளித்தது.
இந்நிலையில், சென்னையின், இரண்டாவது விமான நிலையம், பரந்துாரில் அமைய உள்ளது. இதற்கு, 12 கிராமங்களில், 5,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில், 3,500 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலங்களாகும். மீதம், தனியாருக்கு சொந்தமான விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகளாக உள்ளன. இதுதவிர, கம்பன் கால்வாய் 6 கி.மீ., துாரத்திற்கு மண்ணை கொட்டி துார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, 4.28 கோடி ரூபாய் செலவில் கட்டி வரும் பாலம் வீணாகும் சூழல் உள்ளது என, சமூக ஆர்வலர்கள் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆளும் கட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளின் நெருக்கடி காரணமாக பாலம் கட்டியதாக சமூக ஆர்வலர்கள் சிலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த நிதியை, வேறு ஏதேனும் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு ஊரக வளர்ச்சி துறையினர் ஒதுக்கீடு செய்திருக்கலாம் எனவும் புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையினர் கூறியதாவது:
பரந்துார் விமான நிலையம் அமைப்பதற்கு முன்னரே, கம்பன் கால்வாய் குறுக்கே பாலம் கட்டுவதற்கு திட்டம் தயாரித்து நிர்வாக அனுமதி பெறப்பட்டது. தற்போது பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.
பரந்துார் விமான நிலையம் அமைக்க நிர்வாக அனுமதி அளித்த பின், எங்கள் துறை ரீதியாக எந்த ஒரு கட்டுமான பணிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

