/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'சம்பூர்வராயர்' கோவிலா... 'சஞ்சீவிராயர்' கோவிலா? அய்யங்கார்குளத்தில் சாலை பணி பெயர் பலகையால் குழப்பம்!
/
'சம்பூர்வராயர்' கோவிலா... 'சஞ்சீவிராயர்' கோவிலா? அய்யங்கார்குளத்தில் சாலை பணி பெயர் பலகையால் குழப்பம்!
'சம்பூர்வராயர்' கோவிலா... 'சஞ்சீவிராயர்' கோவிலா? அய்யங்கார்குளத்தில் சாலை பணி பெயர் பலகையால் குழப்பம்!
'சம்பூர்வராயர்' கோவிலா... 'சஞ்சீவிராயர்' கோவிலா? அய்யங்கார்குளத்தில் சாலை பணி பெயர் பலகையால் குழப்பம்!
ADDED : டிச 24, 2025 06:44 AM

அய்யங்கார்குளம்: முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்ட சாலை பணி விபரம் குறித்த அறிவிப்பு பலகையில், 'சஞ்சீவிராயர்' என்ற கோவிலின் பெயர், 'சம்பூர்வராயர்' என, எழுதப்பட்டுள்ளதால், பக்தர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் ஊராட்சியில், பழமையான சஞ்சீவிராயர் கோவில் அமைந்துள்ளது. விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில் தொண்டை மண்டலத்தில் அனுமனுக்காக கட்டப்பட்ட தனி பெரிய கோவிலாகும்.
ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
திரளான பக்தர்கள் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் அய்யங்கார்குளம் சஞ்சீவிராயர் கோவிலுக்கு எழுந்தருள்வார். பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சஞ்சீவிராயர் கோவில் அமைந்துள்ள அய்யங்கார்குளம் முதல் கோளிவாக்கம் வரை வரையுள்ள சாலை 1.900 கி.மீ., நீளமுள்ள சாலை, 'முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டம் 2025 - 26'ன் கீழ், 94.98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
சாலை பணி விபரம் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், அறிவிப்பு பெயர் பலகை சஞ்சீவிராயர் கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.
குழப்பம் இதில், சஞ்சீவிராயர் கோவில் ஒட்டி இச்சாலை அமைந்துள்ளதால், எந்த சாலை என்ற அடையாளத்திற்காக சாலை பணி விபரம் குறித்த அறிவிப்பு பெயர் பலகையில், 'சம்பூர்வராயர் ' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், அய்யங்கார்குளத்தில் உள்ள கோவிலின் பெயர் 'சஞ்சீவிராயர்' கோவிலா, 'சம்பூர்வராயர்' கோவிலா என, கிராம மக்கள் மட்டுமின்றி கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, பணி விபரம் குறித்த அறிவிப்பு பலகையில், 'சம்பூர்வராயர்' என உள்ளதை -'சஞ்சீவிராயர்' என, எழுத வேண்டும் என, அய்யங்கார்குளம் கிராமத்தினரும், பக்தர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
திருத்தி எழுதப்படும் இதுகுறித்து காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அய்யங்கார்குளம் கிராமத்தில் சாலை அமைக்க அனுமதி வழங்கியபோது, பழைய பதிவேட்டில் 'சம்பூர்வராயர்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், அந்த பெயரை மாற்றாமல், சாலை பணி விபரம் குறித்து அறிவிப்பு பெயர் பலகையில், 'சம்பூர்வராயர்' என எழுதப்பட்டுள்ளது.
சாலை பணி முடிந்ததும், அதிகாரிகள் ஆய்வு செய்தபின், கோவிலின் பெயர், 'சம்பூர்வராயர்' என்பதை 'சஞ்சீவிராயர்' என, திருத்தி எழுதப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

