/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுாரில் வணிக வளாக பணி துவங்குவது... எப்போது? அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் டெண்டர் விடுவதில் மந்தம்
/
திருக்கோவிலுாரில் வணிக வளாக பணி துவங்குவது... எப்போது? அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் டெண்டர் விடுவதில் மந்தம்
திருக்கோவிலுாரில் வணிக வளாக பணி துவங்குவது... எப்போது? அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் டெண்டர் விடுவதில் மந்தம்
திருக்கோவிலுாரில் வணிக வளாக பணி துவங்குவது... எப்போது? அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் டெண்டர் விடுவதில் மந்தம்
ADDED : நவ 06, 2025 11:55 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பஸ் ஸ்டாண்ட் , வணிக வளாகம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருக்கோவிலுாரில் விரிவுபடுத்தப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் வேண்டும் என்ற பொது மக்களின் 25 ஆண்டுகளாக கோரிக்கை நிறைவேறும் வகையில், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் புதியபஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது உள்ள பஸ் ஸ்டேண்ட்டிற்கு மேற்கு பகுதியில் தனிநபர்களிடமிருந்த ஐந்து ஏக்கர் நிலம் பல ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சிக்கு வழங்கப்பட்ட பகுதியில் புதிய பஸ் ஸ்டேண்ட் 22.20 கோடி ரூபாய் மதிப்பில், நவீன வசதிகளுடன் 'பி' கிளாஸ் பஸ் ஸ்டேண்ட் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியானது. இதற்கான நிதியும் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் அந்த இடத்திற்கு சென்று வரும் வகையில் 3.60 கோடி ரூபாய்க்கு நிலப்பரிவர்த்தனை, நில எடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 11ம் தேதி கட்டுமானத்திற்கான பூமி பூஜை நடந்தது. பஸ் ஸ்டாண்ட்டிற்கு மேலும் இடம் தேவைப்படுவதால் அரசின் சார்பில் மீண்டும் நில எடுப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனினும் கட்டுமான பணி இன்று வரை துவங்கப்படவில்லை.
திருக்கோவிலுார் மற்றும் கள்ளக்குறிச்சி பஸ் ஸ்டாண்ட்டிற்கான அறிவிப்பு ஒரே நேரத்தில் வெளியான நிலையில், கள்ளக்குறிச்சி பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் 30 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், திருக்கோவிலுார் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி இன்னும் துவங்காமலே இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் திருக்கோவிலுார் நகரின் மையத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு பக்கத்தில் பாழடைந்த நிலையில் இருந்த காந்தி திருமண மண்டபத்தை அகற்றிவிட்டு வணிக வளாகம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகவும், தேர்தல் நேரத்தில் அனைத்து கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியாகவும் இருந்து வந்தது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கையின் போது, சந்தை புதுப்பிக்கும் திட்டத்தில், பழுதடைந்த காந்தி திருமண மண்டபத்தில் வணிக வளாகம் கட்டும் அறிவிப்பு வெளியானது. இதன் மூலம் சாலையோரம் கடை வைத்திருக்கும் காய்கறி, பூ, பழ கடைக்காரர்கள் புதிய வணிக வளாகத்தில் இடம் பெற்று சாலை ஆக்கிரமிப்பிற்கு விடிவுகால பிறந்து நகரில் போக்குவரத்து நேரிசலுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பாக்கப்பட்டது.
இந்நிலையில் ஒன்றிய நிர்வாகத்திற்கு சொந்தமான இந்த இடம் நகராட்சி நிர்வாகத்திற்கு ஒப்படைக்கும் நடைமுறைகள் நிறைவடைந்து 2.46 கோடியில் கட்டுமான பணிகள் துவங்குவதற்கான டெண்டர் நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான நிதியையும் ஒதுக்கிய நிலையில், பணி தாமதமாக அதிகாரிகளின் மெத்தனமே காரணமாக கூறப்படுகிறது.
உயர் அதிகாரிகள் தலையிட்டு பஸ் ஸ்டாண்ட் மற்றும் வணிக வளாகம் அமைப்பதில் அதிகாரிகளின் மந்த நிலையை போக்கி பணியை துரிதபடுத்தினால் மட்டுமே அரசு நினைக்கும் வளர்ச்சி பணி திட்டங்கள் திருக்கோவிலுாரில் வேகம் பெறும். மக்களும் பயனடைவர். மக்கள் பிரதிநிதிகளின் வாக்குறுதியும் நிறைவேறும்.
தேர்தலுக்கு இன்னும் நான்கைந்து மாதங்களே இருக்கும் நிலையில் பஸ் ஸ்டாண்ட் மற்றும் வணிக வளாகம் அமைக்கும் பணியை விரைவாக துவங்கி முடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

