ADDED : ஏப் 12, 2025 04:27 AM
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மாடு திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த விரியூரை சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவர் தனக்கு சொந்தமான, 3 மாடுகளை வயலில் கட்டி வைத்திருந்தார். மாடுகளின் பாதுகாப்பிற்காக, இரவில் வயலில் படுத்து துாங்குவது வழக்கம். நேற்று முன் தினம் வழக்கம் போல, வயலில் உள்ள கொட்டகையில் படுத்து துாங்கி கொண்டிருந்தார்.
நள்ளிரவில் மாடு கத்தும் சத்தம் கேட்கவே கண் விழித்து கொட்டகைக்கு வெளியே வந்துபார்த்தார்.
அப்போது வயலில் கட்டியிருந்த, 3 மாடுகளில் ஒன்றை மட்டும், இருவர் திருடி ஓட்டி செல்வது தெரிந்தது. இதையடுத்து அவரும், பக்கத்து வயலில் இருந்தவர்களும், துரத்தி சென்று அவர்களை பிடித்து, சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர்கள், சங்கராபுரம் வட்டம் சிட்டந்தாங்கலை சேர்ந்த ஆறுமுகம் மகன் சக்திவேல், 44; ராமராஜாபுரத்தை சேர்ந்த குப்பன் மகன் குமார், 30; என தெரிந்தது. தொடர்ந்து போலீசார் உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

