/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மீட்டர் பொருத்திய ஆட்டோவை ஸ்டாண்டிற்குள் நிறுத்த எதிர்ப்பு
/
மீட்டர் பொருத்திய ஆட்டோவை ஸ்டாண்டிற்குள் நிறுத்த எதிர்ப்பு
மீட்டர் பொருத்திய ஆட்டோவை ஸ்டாண்டிற்குள் நிறுத்த எதிர்ப்பு
மீட்டர் பொருத்திய ஆட்டோவை ஸ்டாண்டிற்குள் நிறுத்த எதிர்ப்பு
ADDED : நவ 27, 2025 02:07 AM
புன்செய்புளியம்பட்டி, புன்செய் புளியம்பட்டி பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில், 39 ஆட்டோக்கள் உள்ளன. பு.புளியம்பட்டியை சேர்ந்த அலாவுதீன் என்பவர், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மீட்டர் ஆட்டோவை ஸ்டாண்டில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.
இதற்கு மற்ற ஆட்டோ ஓட்டுனர்கள், மீட்டர் கட்டணம் என எழுதப்பட்டுள்ள ஆட்டோவை ஸ்டாண்டுக்குள் நிறுத்த எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நகராட்சி அலுவலகம் முன்புறம் ஆட்டோவை அலாவுதீன் நிறுத்தியுள்ளார். இதற்கும் எதிர்ப்பு தெரிவித்த ஆட்டோ ஓட்டுனர்கள், மீட்டர் கட்டணம் என எழுதப்பட்டுள்ள ஆட்டோவை இயக்கக் கூடாது எனக் கூறி, தங்கள் ஆட்டோக்களை குறுக்கே நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பு.புளியம்பட்டி போலீசார் ஆட்டோ ஓட்டுனர்களை போலீஸ் ஸ்டேஷன் வரவழைத்து, பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக தீர்வு கண்டனர்.
ஆட்டோ ஓட்டுநர் அலாவுதீன் கூறுகையில்,'' ஆட்டோ ஸ்டாண்டில் மினிமம் சார்ஜ், 60 முதல் 80 ரூபாய் வரை வசூல் செய்கின்றனர். நான் புதிதாக வாங்கிய ஆட்டோவில் மீட்டர் கட்டணம் மினிமம் சார்ஜ் 50 ரூபாய் மற்றும் 1 கி.மீ.,க்கு ரூ.12.50 என கட்டணம் நிர்ணயம் செய்து எழுதபட்ட போர்டு பொருத்தி ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்துவதற்காக வந்தேன். அப்போது மற்ற ஆட்டோ ஓட்டுனர்கள், இதுபோன்ற போர்டுடன் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை. இங்கு நிறுத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, சுற்றிலும் 10க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை குறுக்கே நிறுத்தி பிரச்னை செய்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, குறிப்பிட்ட துாரத்துக்கு மேல் ஆட்டோவை நிறுத்தி இயக்கி கொள்ளலாம் என பிரச்னையை தீர்த்து வைத்துள்ளனர்,''என்றார்.

