/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் ஆயுத பூஜை கோலாகலம்
/
திண்டுக்கல்லில் ஆயுத பூஜை கோலாகலம்
ADDED : அக் 12, 2024 05:09 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயுத பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீடுகள்,தனியார் நிறுவனங்களில் பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.
திண்டுக்கல்லில் ஆயுதபூஜை கொண்டாட்டத்தை தொடர்ந்து பொருட்களை வாங்குவதற்காக திருச்சி ரோடு,பழநிரோடு தற்காலிகமாக ரோட்டோரங்களில் அமைக்கப்பட்ட கடைகளில் ஆயுத பூஜை பொருட்களின் விற்பனை நேற்று ஜோராக நடந்தது. பொரி, வாழைப்பழம், திராட்சை, ஆப்பிள், மாதுளை, கதம்பம்,வாழை கன்று,மாவிலை ,வாழை இலை போன்ற பொருட்களை மக்கள் ஆர்வமாக தேடி தேடி வாங்கினர். இதேபோல் தேங்காய்,திருஷ்டி பூசணி,எலுமிச்சம்பழமும் அதிகளவில் விற்பனையானது. காலை முதல் நகர் பகுதிகளில் செயல்படும் தனியார் நிறுவனங்கள்,கடைகளில் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், வாகனங்களுக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்தனர். ஆட்டோ,கார், லாரி ஸ்டாண்ட்களில் வாகனங்களுக்கு வாழை கட்டி, மாலை அணிவித்து நகர்களில் ஊர்வலமாக சென்றனர். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிறப்பு வழிபாடுகள் செய்தனர். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களும் வழிபாடு செய்தனர். திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், 108 விநாயகர் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், வெள்ளை விநாயகர், சித்தி விநாயகர் என பல்வேறு கோயில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர். வாகனங்களை கழுவி மாலையிட்டு, சந்தனம், குங்குமமிட்டு, வாழை கன்றுகள் கட்டுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாலை முதலே வாட்டர் சர்வீஸ் கடைகளில் டூவீலர்கள்,கார்கள் வைத்திருப்போர் குவிந்தனர். பலர் வீடுகளிலே கழுவினாலும் பெரும்பாலோனோர் கடைகளுக்கு கொண்டு வந்து வாட்டர் சர்வீஸ் செய்தனர்.

