/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வி.சி., கட்சியினர் எதிர்ப்பு
/
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வி.சி., கட்சியினர் எதிர்ப்பு
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வி.சி., கட்சியினர் எதிர்ப்பு
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வி.சி., கட்சியினர் எதிர்ப்பு
ADDED : நவ 27, 2025 02:24 AM
அரூர், அரூரில், அம்பேத்கர் சிலைக்கு, பா.ஜ.,வினர் மாலை அணிவிப்பதற்கு, வி.சி.,கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி, தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு நேற்று காலை, 11:30 மணிக்கு தர்மபுரி கிழக்கு மாவட்ட, வி.சி., செயலாளர் சாக்கன் சர்மா தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின், அரசியலமைப்பு சட்ட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது, அரூர் நகர, பா.ஜ., தலைவர் ரூபன், மாவட்ட பட்டியல் அணி தலைவர் கலையரசன் உள்ளிட்ட, பா.ஜ., நிர்வாகிகள், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர்.
இதற்கு, வி.சி., மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா உள்ளிட்ட கட்சியினர், பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட அமைப்புகள் அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை சிதைத்து வருகின்றன. எனவே, நீங்கள் மாலை அணிவிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். மேலும், 'நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை போட்டுக் கொள்ளுங்கள். ஆனால், இன்று ஒரு நாள் மட்டும் மாலை போடக்கூடாது' என, வி.சி.க.,வினர் கூறினர். இதனால், பா.ஜ., - வி.சி., கட்சியினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அரூர் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, 12:05 மணிக்கு, பா.ஜ.,வினர் மாலை அணிவிக்காமல், அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து, அம்பேத்கர் சிலை அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மதியம், 1:20 மணிக்கு திரும்பி வந்த, பா.ஜ.,வினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் சாமிக்கண்ணு, சாட்சாதிபதி, கலையரசன், ரூபன், முருகன் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

