/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்வாய்களை துார்வார நிதி ஒதுக்குவதாக சொன்னீர்களே... செய்தீர்களா! நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
கால்வாய்களை துார்வார நிதி ஒதுக்குவதாக சொன்னீர்களே... செய்தீர்களா! நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
கால்வாய்களை துார்வார நிதி ஒதுக்குவதாக சொன்னீர்களே... செய்தீர்களா! நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
கால்வாய்களை துார்வார நிதி ஒதுக்குவதாக சொன்னீர்களே... செய்தீர்களா! நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : அக் 24, 2025 11:54 PM

பொள்ளாச்சி: பி.ஏ.பி. திட்ட கால்வாய்களை துார்வார நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டார். இரண்டு மாதங்களாகியும் இன்னும் நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.
ஆழியாறு நீர் தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில், திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம், பல்வேறு விவசாய அமைப்பினர், விவசாயிகள் பேசியதாவது:
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு அக்., மாதம் 2ம் தேதி முதல் பாசன நீர் திறப்பது வழக்கம். கிளை கால்வாய்களை நீர்வளத்துறை அல்லது வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்திய பின் நீர் திறக்கப்படும்.
பொள்ளாச்சி, உடுமலையில் நடந்த விழாக்களில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், கிளை கால்வாய்களை சுத்தப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். ஆனால், இரண்டு மாதங்களாகியும் அந்த நிதி இன்னும் வரவில்லை.கால்வாய்கள் துார்வாரப்படாமல் உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து, பாசன நீர் திறக்க ஆவணம் செய்ய வேண்டும்.
பொள்ளாச்சி கால்வாய், அங்கலகுறிச்சி நான்காவது கிளை கால்வாய் கரையை ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்துள்ளனர். இதை அப்புறப்படுத்த பலமுறை மனு கொடுத்தும் அரசியல் தலையீட்டால், ஆக்கிரமிப்பு அகற்ற முடியாத நிலை உள்ளது.
பொள்ளாச்சி கால்வாயின் ஏழாவது கிளை அரசூர் அருகே உள்ளது. இந்த கால்வாய் கரையில் உள்ள மரங்களால், கரை பெயர்ந்து, பாசன நீர் விரயமாகிறது. கடைமடை வரை தண்ணீர் கொண்டுசெல்ல முடியவில்லை.
வேட்டைக்காரன்புதுார் கால்வாயில், நேரடி மடை கால்வாயை ஆக்கிரமித்து தனியார் ஒருவர் குடிசை அமைத்து மின் இணைப்பும் பெற்றுள்ளார். இவ்வழியாக விவசாயிகளின் வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளது.
ஜமீன் ஊத்துக்குளி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. கிராம நிர்வாக அலுவலரும் முகாமுக்கு சென்று விடுவதால், மக்கள் சிட்டா, அடங்கல் உள்ளிட்டவை வாங்க அலைய வேண்டியதுள்ளது. இங்கு தனிநபர் ஒருவர் நியமிக்கப்பட்டதால் அவரை அணுக முடியாத நிலை உள்ளது.
பொள்ளாச்சி பகுதியில் புதியதாக வீட்டு மனைப்பட்டாக்களுக்கு அனுமதி கொடுக்கும் போது, அரணி கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என கண்காணிப்பு செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள கால்வாய்களை மீட்டெடுக்க வேண்டும்.
ஆர்.பொன்னாபுரத்தில் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்டுள்ள 'ரெடிமிக்ஸ் யூனிட்' மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேற்கு புறவழிச்சாலை பணிகள் முடிவடைந்த நிலையில், '18 ஏ' பஸ், சி.கோபாலபுரம் செல்லும் பஸ், பழைய முறைப்படி ஆர்.பொன்னாபுரம் வழியாக இயக்க வேண்டும். அதே போன்று, '1 ஏ/ 18 பி' அரசு பஸ் சி.கோபாலபுரம், கருமாண்டகவுண்டனுார், ஜமீன் காளியாபுரம் செல்கிறது. இந்த பஸ், ஆர்.பொன்னாபுரம் வழியாக இயக்க வேண்டும்.
ஆனைமலை, வடக்கலுார், காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காட்டுப்பன்றிகள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த முடியாத சூழலால், நெற்பயிர்கள் வீணாகின்றன. அவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் கூட்டுக்குழுமம் உருவாக்க நிதி ஒதுக்கப்பட்டும், அதற்கான பணிகள் துவங்கவில்லை. இதற்குரிய விளக்கம் அளிக்க வேண்டும். பி.ஏ.பி., உபரிநீரை தேவம்பாடிவலசு குளத்துக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு, பேசினர்.
சப் - கலெக்டர் பேசுகையில், ''கிராம உதவியாளர் பணியிடத்துக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் பணியிடம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் தெரிவித்த பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணப்படும்,'' என்றார்.

