sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மார்க்கெட்டை மாற்ற சம்மதிக்க மாட்டோம் கருத்து கேட்பு கூட்டத்தில் காய்கறி, பழ வியாபாரிகள் திட்டவட்டம்

/

மார்க்கெட்டை மாற்ற சம்மதிக்க மாட்டோம் கருத்து கேட்பு கூட்டத்தில் காய்கறி, பழ வியாபாரிகள் திட்டவட்டம்

மார்க்கெட்டை மாற்ற சம்மதிக்க மாட்டோம் கருத்து கேட்பு கூட்டத்தில் காய்கறி, பழ வியாபாரிகள் திட்டவட்டம்

மார்க்கெட்டை மாற்ற சம்மதிக்க மாட்டோம் கருத்து கேட்பு கூட்டத்தில் காய்கறி, பழ வியாபாரிகள் திட்டவட்டம்


ADDED : ஜன 04, 2025 11:06 PM

Google News

ADDED : ஜன 04, 2025 11:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: வெள்ளலுாரில் பாதி கட்டி முடிக்கப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்கு, மார்க்கெட்டுகளை மாற்றுவது தொடர்பாக, வியாபாரிகளின் கருத்து அறியும் கூட்டம், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடந்தது.

மார்க்கெட் நடத்த ஒதுக்கியுள்ள இடம்; என்னென்ன வசதிகள் செய்து தரப்படும் என்பதை, மாநகராட்சி தெற்கு மண்டல நிர்வாக பொறியாளர் இளங்கோவன் விளக்கினார்.

மேட்டுப்பாளையம் ரோடு அண்ணா காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கம், எம்.ஜி.ஆர்., மார்க்கெட் காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கம், ராஜ வீதி தியாகி குமரன் மார்க்கெட் மொத்த காய்கறி வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன்பின், கருப்ப கவுண்டர் வீதி மொத்த பழ வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலீல் ரகுமான், திருப்பதி, உக்கடம் புல்லுக்காடு புதிய பெருநகர பழ வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஜவஹர், சலீம், சிராஜூதீன், பைசல் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. காய்கறி வியாபாரிகள் தரப்பினர் சம்மதிக்கவில்லை.

உடன்பாடு இல்லை


கோவை மாவட்ட பழக்கமிஷன் வியாபாரிகள் சங்க தலைவர் ஜவஹர் பேசியதாவது:

1951க்கு முன், மாநகராட்சி அலுவலகத்துக்கு பின்புறம் மீன், பழம் மற்றும் இரும்பு கடைகள் செயல்பட்டன. மாநகராட்சி அலுவலக விரிவாக்கத்துக்காக, உக்கடம் குளத்துக்கு எதிரே மாற்றப்பட்டன. மேம்பாலம் கட்டுவதற்காக சில ஆண்டுகளுக்கு முன், புல்லுக்காடு மைதானத்துக்கு பழக்கடைகள் மாற்றப்பட்டன. அங்கு இடம் மட்டும் வழங்கப்பட்டது; வியாபாரிகள் சேர்ந்து பல கோடி ரூபாய் செலவழித்து, மார்க்கெட் உருவாக்கியுள்ளோம்.

மாநகராட்சி அதிகாரிகள் மார்க்கெட்டுக்கு, நேரில் வந்து ஆய்வு செய்து, தேவைகளை பட்டியலிட்டு, அதற்கான கட்டமைப்பை உருவாக்கியிருக்க வேண்டும். வியாபாரிகளிடம் ஆலோசித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தீர்மானம் நிறைவேற்றி விட்டு, பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்கு பழ மார்க்கெட்டுகளை மாற்றுவதற்கு, எங்களுக்கு உடன்பாடு இல்லை.

வெள்ளலுாரில் குப்பை கொட்டும் இடத்துக்கு அருகே அமைந்திருக்கிறது; கிருமி பரவியிருக்கிறது. அப்பகுதியை சுற்றி வசிப்பவர்கள் நோய்வாய்ப்பட்டு இருக்கின்றனர்.

பழங்கள் விற்பதற்கு அவ்விடம் ஏற்புடையதல்ல. ஈக்கள் மொய்க்கும்; உணவு பொருள் விஷமாகி விடும். பொதுமக்களின் உடல்நிலையை பாதிக்கும் என்பதால், மார்க்கெட்டை மாற்றுவதற்கு உடன்பாடு இல்லை.

இவ்வாறு, கூறினார்.

சுகாதாரமற்றது


கோவை சிட்டி ப்ரூட்ஸ் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் கலீல் கூறுகையில், ''செல்வபுரம் பைபாஸில், 21 ஆண்டுகளுக்கு முன், ஐந்து ஏக்கர் நிலம் வாங்கி, மார்க்கெட் உருவாக்கி, 60 உறுப்பினர்கள் பெயரில் பதிவு செய்திருக்கிறோம். 60 சதவீத கட்டுமான பணி நடந்திருக்கிறது.

கருப்ப கவுண்டர் வீதி, வைசியாள் வீதி, பெரிய கடை வீதிகளில் செயல்படும் மார்க்கெட்டுகள் முழுமையாக செயல்பட தடை விதித்தால், செல்வபுரத்தில் சொந்தமாக கட்டியுள்ள கடைகளுக்கு செல்ல தயாராக இருக்கிறோம். வெள்ளலுார் பகுதி தொலைவானது; சுகாதாரமற்றது; கண்ணுக்குத் தெரியாத கிருமி பரவியிருக்கிறது. பழ மார்க்கெட் செயல்பட உகந்த இடமில்லை,'' என்றார்.

''காய்கறி மற்றும் பழ வியாபாரிகளின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு, அரசின் பார்வைக்கு அனுப்பப்படும். தமிழக அரசிடம் இருந்து அறிவுறுத்தல் வந்தபின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, நிர்வாக பொறியாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

வேறிடம் ஒதுக்க கோரிக்கை

உக்கடம் லாரிப்பேட்டையில் செயல்படும் புக்கிங் ஏஜன்டுகளிடம் கருத்து கேட்கும் கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. 'வெள்ளலுார் பகுதியில் தற்போதுள்ள சூழலை பார்க்காதீர்கள்; எதிர்காலத்தில் சிறப்பாக இருக்கும்' என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.'சிட்டி லாரி புக்கிங் ஏஜன்ட் அசோசியேஷன்' காஜா உசேன் கூறுகையில், ''நகருக்குள் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என கருதினால், லாரிகளை மட்டும் நிறுத்துவதற்கு மாற்று இடம் கொடுங்கள்; வெள்ளலுார் வேண்டாம். தொற்று நோய் பரவும் பகுதியாக இருக்கிறது. லாரி டிரைவர்கள் கேரளம், கர்நாடகா, ஆந்திரா என பல மாநிலங்களுக்குச் செல்கின்றனர். அம்மாநிலங்களுக்கு நோயை பரப்பி விட்டு விடக்கூடாது.அதேநேரம், லாரி புக்கிங் அலுவலகங்களை உக்கடத்தில் இருந்து மாற்ற விருப்பமில்லை. தொழில் செய்வோரை தொந்தரவு செய்ய வேண்டாம். புக்கிங் மட்டுமின்றி இன்னும் பல்வேறு தொழில்கள் செய்வதால், இங்கிருந்து மாறிச்செல்வதற்கு விருப்பமில்லை,'' என்றார். கடிதமாக எழுதிக் கொடுக்க அதிகாரிகள் அறிவுறுத்தினர். தங்களது கோரிக்கை என்ன; எதன் காரணமாக வெள்ளலுாரை தவிர்க்கிறோம்; மாற்று இடம் எந்த பகுதியில் தேவை; என்னென்ன வசதிகள் தேவை என்பதை ஒரு வாரத்துக்குள் கடிதமாக வழங்குவதாக அசோசியேசன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us