/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரு ஊராட்சிகளின் நிர்வாக குளறுபடி 1 கி.மீ., சாலையில் 'மெகா பள்ளங்கள்'
/
இரு ஊராட்சிகளின் நிர்வாக குளறுபடி 1 கி.மீ., சாலையில் 'மெகா பள்ளங்கள்'
இரு ஊராட்சிகளின் நிர்வாக குளறுபடி 1 கி.மீ., சாலையில் 'மெகா பள்ளங்கள்'
இரு ஊராட்சிகளின் நிர்வாக குளறுபடி 1 கி.மீ., சாலையில் 'மெகா பள்ளங்கள்'
UPDATED : செப் 17, 2025 06:09 AM
ADDED : செப் 17, 2025 03:06 AM

சென்னை: இரு ஊராட்சியின் கீழ் வரும் ஒரே சாலையில், நிர்வாக குளறுபடியால் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், சாலை சேதமாகி ஏற்பட்ட மெகா பள்ளங்களால், வாகன ஓட்டிகள் பீதியில் பயணிக்கின்றனர்.
வடக்குப்பட்டு, நடேசன் நாயிக்கர் தெரு - காந்தி நகர் பிரதான சாலை, 942 மீட்டர் நீளமுடையது. இதில், மேடவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட நடேசன் நாயிக்கர் தெரு 320 மீட்டர் நீளமும், கோவிலம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிலம்பாக்கம் காந்தி நகர் பிரதான சாலை 622 மீட்டர் நீளமும் உடையது.
பரங்கிமலை ரயில் நிலையம் செல்வோர், இச்சாலையை பயன்படுத்துவதால் போக்குவரத்து அதிகம் இருக்கும். காலவிரயம் வெகுவாக குறைகிறது.
இச்சாலையின் இருபுறமும் 1500க்கும் மேற்பட்ட வீடுகள், வடக்குப்பட்டு பிரதான சாலையில் நான்கு தனியார் பள்ளிகள், கோவிலம்பாக்கத்தில் அரசு பள்ளி உட்பட ஐந்து தனியார் பள்ளிகளும் அமைந்துள்ளன. எனவே, பள்ளி செல்லும் மாணவ- - மாணவியரும், இந்த சாலையைத்தான் பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.
நிர்வாக குளறுபடியால், இந்த சாலை பராமரிப்பு பணி நடந்து, ஏழு ஆண்டுகளுக்கு மேலாகிறது எனக்கூறப்படுகிறது. சாலை நிதி நிதி அனுமதிக்கப்பட்ட போதிலும், அதிகாரிகள் சாலை அமைக்க தவறிவிட்டனர். பராமரிப்பு பணிகள் நடக்காததால் பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தற்போது, சாலை முழுதும் மெகா பள்ளங்களாக மாறி, மழைநீர் தேங்கி குட்டைகளாக மாறியுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
பகுதிவாசிகள் கூறுகையில், 'மழைக்காலம் துவங்க உள்ளதால், பெரும் அசம்பாவிதம் நிகழும்முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க, மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
இது குறித்து கோவிலம்பாக்கம், மேடவாக்கம் ஊராட்சி நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, 'குறிப்பிட்ட சாலையை புனரமைக்க, மத்திய அரசின் 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.23.17 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நிர்வாக அனுமதி கிடைத்ததும், உடனடியாக இந்த சாலை அமைக்கப்படும்' என தெரிவித்தனர்.