/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாய்மை பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வாரிய குடியிருப்புகளில் விழிப்புணர்வு
/
துாய்மை பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வாரிய குடியிருப்புகளில் விழிப்புணர்வு
துாய்மை பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வாரிய குடியிருப்புகளில் விழிப்புணர்வு
துாய்மை பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வாரிய குடியிருப்புகளில் விழிப்புணர்வு
ADDED : செப் 18, 2025 12:42 AM

சோழிங்கநல்லுார், தமிழகத்தில் அதிக வீடுகள் கொண்ட கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய வாரிய குடியிருப்புகளில், வீடுகள்தோறும் குப்பை சேகரிக்கும் பணி, தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில், 10 சதவீத வீடுகளில் ஒத்துழைப்பு இல்லாததால், பள்ளி மாணவ - மாணவியர் வழியாக, விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
சோழிங்கநல்லுார் மண்டலம், 195, 196 மற்றும் 200 ஆகிய வார்டுகளில் உள்ள கண்ணகி நகர், எழில் நகர், செம்மஞ்சேரி சுனாமி நகர் ஆகிய நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில், 30,000 வீடுகள் உள்ளன. இங்கு, துாய்மை பணியை மாநகராட்சி செய்தது. முறையாக குப்பை சேகரிப்பதில்லை; தெருக்களையும் சுத்தம் செய்வதில்லை என்ற புகார் எழுந்தது.
இதை ஒட்டி உள்ள பெரும்பாக்கம் வாரிய குடியிருப்பில், 24,000 வீடுகள் உள்ளன. ஊராட்சி பகுதியானதால், வாரியம் வழங்கிய நிதியில், மாநகராட்சி துாய்மை பணி செய்தது.
அடுக்குமாடி வீடுகளில், மாடியில் இருந்து குப்பையை கீழே வீசுவதால், இரண்டு பிளாக்குகளுக்கு இடைப்பட்ட பகுதி மற்றும் வடிகால்வாய், கழிவுநீர் பாதைகளில் அடைப்பு ஏற்பட்டது. பருவமழை காலங்களில், வெள்ள பாதிப்புக்கு இதுவும் ஒரு காரணமானது.
அதனால், வீடுகள்தோறும் குப்பை சேகரிக்கும் பணியை, தனியார் வசம் ஒப்படைக்க அரசு முடிவு செய்தது. இதன்படி, கண்ணகி நகர், செம்மஞ்சேரி குடியிருப்புகள், 'பத்மாவதி' என்ற ஒப்பந்த நிறுவனத்திடம், ஒன்பது மாதங்கள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இந்நிறுவனம், 275 துாய்மை பணியாளர்களை நியமித்துள்ளது.
அதேபோல், பெரும்பாக்கத்தில் குப்பை சேகரிக்கும் ஒப்பந்தம், ஜெ.கே., என்ற நிறுவனத்திடம், ஒரு ஆண்டுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனம், 320 துாய்மை பணியாளர்களை நியமித்துள்ளது.
இரண்டு நிறுவனங்களும், இரண்டு மாதங்களாக துாய்மை பணி செய்து வருகின்றன. தொடர் விழிப்புணர்வால், 90 சதவீத மக்கள் குப்பையை முறையாக கையாளுகின்றனர். பத்து சதவீத மக்கள் அடம் பிடிப்பதால், தினமும் எதாவது ஒரு பிரச்னை ஏற்படுவதாக, துாய்மை பணியாளர்கள் புலம்புகின்றனர்.
மாநகராட்சி மற்றும் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
மூன்று இடங்களிலும், அதே பகுதியில் வசிப்போரை துாய்மை பணியாளர்களாக தேர்வு செய்துள்ளோம். வீடுகளில் சேகரிக்கும் குப்பையை, தெரு தொட்டிகளில் கொட்டிவிடுவர்.
அது, பின் பெருங்குடி கிடங்குக்கு கொண்டு செல்லப்படும். தற்போது, 90 சதவீதம் வீடுகளில் குப்பையை பணியாளர்களிடம் வழங்குகின்றனர்.
சுற்றுப்புற பகுதிகள் துாய்மையாக இருக்க வேண்டும் என நினைப்போர், ஒத்துழைப்பு வழங்குகின்றனர். பத்து சதவீதம் பேரிடம் விழிப்புணர்வு இல்லை.
சமுதாய வளர்ச்சி பிரிவு, தன்னார்வ அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பள்ளிகளில், ஆசிரியர்கள் வாயிலாக, மாணவ - மாணவியருக்கு குப்பை சேகரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினால், அவை வீடுகளில் எதிரொலிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.